தொலைந்த சிறு வயது

நண்பா…….
எப்படி இழந்தோம்
என்பது தெரியாமலேயே
தொலைந்து போய்விட்டன
அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து
உப்புநீரில் குளித்தால்
மேனி கருக்குமென்ற
அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி
வியாபாரி தோட்டத்து
நன்னீர் கிணறு அதிர
குதித்தாடிய ஈர நாட்கள்…

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய
உறுமீனுக்காய்த் துள்ளி
விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்
பீற்றிக்கொண்ட நாட்கள்…

கவட்டைக் கொம்பொடிய
நுங்கு மட்டை வண்டியுருட்டி
சக நண்பர்களுடன்
தோற்றும் ஜெயித்தும்
விளையாடிய நாட்கள்…

மொட்டுவிட்ட
தட்டாஞ்செடிகளில்
பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை
காத்துக் கிடந்து
நாவூறப் பறித்து
ருசித்த நாட்கள்…

நினைத்தாலே நினைவுகளில்
ஈரம் சுரக்கும்
பிள்ளைப் பிராய நாட்களை
தொலைத்துவிட்டு..

கைகளை விரித்தபடி
ஓடிவரும் குழந்தைகளை
வெறுமை பூசிய நாட்களால்
வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்
இப்போது!

______________________________________________________________________

முத்துக்குமார்

Advertisements

உழவனை உயர்த்துவோம்

urqsp_342976

எங்கள்
பசியின்வலியை உணர்ந்து;
உங்கள்
வாழ்க்கை வழியை மறந்து;
சேற்றில் கால்வைத்தீர்களே…….
உழவர்களே…..
நீரே எம் தோழர்கள்!!!!

பதவியைத் துறந்து;
பணத்தினை மறந்து;
மனிதநேயத்துடன் வாழும்,
உன்னத உழவர்களே…..
நீரே எம் இறைவன்!!!!!

“தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்“
என்றான் மகாகவி பாரதி.
ஆனால்
“உலகிற்கே உணவளிக்கும்
உம்மைப் போல
உவமை ஒன்றுமில்லை ஐயா!!!”

நீவீர் படும்துன்பமும் அறிவேன்..
அத்துன்பத்திலும் ,
மனம் கல்லாய் போன மனிதனுக்காக
உழைக்கும் ,உம்
உயரிய எண்ணமும் அறிவேன்

மக்களுக்கு ஓர் வேண்டுகோள்….

உழவனைப் போற்றி;
அவன் துன்பம் உணர்ந்து
உதவிடுங்கள்…
அவன்
நல்லெண்ணம் உணர்ந்து…
வணங்கிடுங்கள்!!!!

_____________________________________________________________________

பானுமதி

இரவும் வானமும் போல

kjgna_343314

வாழ்க்கை
எதற்குமே நமக்கு
சமயங்களைக் கொடுக்கவில்லை
நம் சந்திப்பின்
இடைவெளிகளே தீர்மானிக்கும்
உனக்கு என்னால்
அந்த கிடைத்த நேரத்தில்
என்ன கொடுக்க இயலும் என்பதை

என்றாவது ஒருநாள்
ஒரு சாலையில் வைத்து உன்னை சந்திக்கநேரிடும்
அச்சமயம்
நமக்கு நம்மிடமென்று
சொல்லி அழவோ
பகிர்ந்துகொள்ளவோ நிறைய இருக்கலாம்
அதற்கான
அதிகபட்ச சமயங்கள்
அங்கு இல்லாமல் போகும்
கிடைக்கின்ற நிமிடங்களில்
எப்போதுமான, அழகிய புன்னகை மாறாமல்
ஹாய், ஆர் யூ ஆல்ரைட்
என்றுவிட்டு
அந்த இடம் விட்டு நகர்ந்துவிடுவேன்
புரிந்துகொள்,
அந்த சூழலுக்காக, மன்னித்துக்கொள்

அதிக பட்சம்
ஒரு காஃபி ஷாப்பில்
இருவர் மட்டுமே இருக்கும் மேசையில்
எதிரெதிரே அமர்ந்து
நானும் நீயும் காஃபி பருகும் வாய்ப்பு உருவாகலாம்
அப்போதும் கூட
நமக்கு
பகிர்ந்துகொள்ளவோ
சொல்லிக்கொள்ளவோ நிறைய இருக்கும்
அதை விட்டுவிடலாம்,
பதிலாக
உன் சமயங்களில்,
ஒரு பத்து நிமிடங்களைக்கொடு
உன் வாழ்நாளில்
நீ மறக்க முடியாதது மாதிரி
அதை அழகாக்கி
திரும்ப உன் கைகளுக்கே
கொடுத்துவிடுகிறேன்
பெயர்த்தெரியாத ஒரு புதுப்பூவின் வாசனையை
உன்னைச்சுற்றியெங்கும்
தூவிவிட்டு
அங்கிருந்து காணாமல் மறைந்துவிடுகிறேன்

நீ இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
அந்த சாலையின் முதல் வளைவில் சென்று
ஒரு தொலைவில்
கரும்புள்ளியாகி மறையும்வரை
அந்த வாசனை,
உன்னிடமிருந்து இடம்பெயராமல் இருக்கட்டும்
அந்த நேரமின்மையை
புரிந்துகொள்

ஒருநாள்
உன்னிடம் நானும் என்னிடம் நீயுமென
முழுதாக
புதைந்துகிடக்கும் முழுநீள இரவொன்று கிடைக்கும்,
தொடுக்காத
மலர்க்கூட்டங்களுக்கிடையில்
தோள்பட்டையும் மார்பும்
தருகிறேன்,
உன் முகம் திறக்கும்
அந்த இருளிற்கு
அன்று விடுப்புக்கொடுத்துவிடலாம்
பேசிக்கொண்டே இரு,
இந்த உணர்வுகள்
என்னிடம் மட்டுமே
கிடைப்பதாக
அன்றெல்லாம் சொல்லிக்கொண்டே இரு…

_______________________________________________________________________

அனுசரன்

நீயே சொல்வாயே

xoegp_343107

ஓரமாய் நின்று உன்னைப்
பார்த்துவிட்டு போகும்போது
சாதித்ததாய் உள்ளம் மகிழும்..
ஆம் எனக்கிது சாதனைதான்!

உன்னைக் காணாத நாட்களும்
உண்டல்லவா?

மழை தூறும் நேரம்
மண்ணிண் வாசம் வீசும்..
என்னை நீ காணும் நேரம்
வாசமுள்ள காதல் பூ மலரும்..
உன் அலங்காரங்கள் என்னை
ஈர்க்கத்தானே!

வான் நிலவே
என்னில் பூத்த தாமரையே..
மனம் முழுதும் படர்ந்தாயே..
கனவல்ல என் காதலியே உன்

கரம் பிடிக்காத இதயத்தையே
கேளாயோ?ஒரு சொல்
கூறாயோ?வாராயோ என்
அன்பை பெற வாராயோ?
துரத்தி பிடிக்க நீ தொலைவில்
இல்லை
இழுத்து அணைக்க நீ அருகில்
இல்லை
தொட முடியும் ஆனாலும்
தொட முடியாது
இதென்ன விந்தையோ?
இல்லையென் சிந்தையோ?
நீயே சொல்வாயே……

_____________________________________________________________

பெ.பரிதி காமராஜ்

 

உனக்கொரு கவலை வேண்டாம்

 

nrpft_338221.jpg

என்னவளாய் இருந்தவளே
உனக்கொரு கவலை வேண்டாம்
உன் நினைவு என் இதய கடிகாரத்தில்
சற்றுத் தளர்ந்தே தான் ஓடுகிறது
உன்னை மறக்க தொடங்கி விட்டேன்

நாம் எடுத்த புகைப்படங்கள்
யாவும் புகையாகி விட்டன
உன் பெயரை யாரும் உச்சரிப்பின்
நான் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை
உன்னோடு சேர்ந்து சென்ற இடங்கள்
தனிமையில் கூட அழகாய் இருக்கின்றன
கனவுகளில் கூட நான் உன்னை
நினைப்பது இல்லை

கவலையோ கண்ணீரோ
வீட்டாரிடம் சொல்லத் தொடங்கி விட்டேன்
இப்போது செல்பிக்கு கூட
நண்பர்கள் இருக்கிறார்கள்
முகப்புத்தகத்தில் உன் அப்டேட்
பார்த்து கூட நாட்கள் ஆகி விட்டன
இப்போது கொஞ்சம் வேலைக்கும்
நேரம் ஒதுக்குகிறேன்
உன்னைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம்
கிடைப்பதில்லை

உனக்கு இனிமேலும் கவலை
வேண்டாம்
நம் இறந்த காலம் பற்றி
நான் இறந்தாலும்
சொல்லமாட்டேன்
உன் கணவனாகும் என் நண்பனிடம் ………..


– தமிழரிமா

காதலை கண்டேன்

keuhr_337948.jpg

அன்பே
இதுவரை யாரிடமும் அடிமையாகமல்
இருந்த என் உள்ளம்
முதன் முதலாக அடிமையானது!
உன் அன்பில்…!!,

ஆசைகளை துறக்க தெரிந்த
எனக்கு உன் அன்பினை
துறக்க தெரியாமல் தினமும்
பின்தொடர்ந்தேன் உன்னை,

உன்னுடன் நான் சேர்ந்த
நாட்களில் நானும் உணர்ந்தேன்!
நான் பிறந்தது உன்னுடன் சேர என்று!!,

இரகசியமாக உன்னை காணும்
நாட்களில் எல்லாம்
நான் என்பதையும் மறந்து
உனக்காக நான் என்று
முழுமையாக இருந்தேன்,

என் உயிர் காதலை
உணராமல் எங்கு
களைத்துவிடுவார்களோ என்று
என் விரல் பிடித்த
நண்பனிடமும்
நான் விரும்பி தவித்த
கடவுளிடமும்
காட்டாமல் மறைத்தேன்,

இதழால் இனித்து இனித்து
நீ என்னை அழைக்க
இன்பம் என்பது என்னுள்ளே
எண்ண முடியா அளவில் பெருகியது,

கண்ணகளால் நான் காணும்
இன்பங்களை இனித்து காண
கண்ணாடி முன்பு
சென்றபோதுதான் கண்டேண்!
கவனிக்க நேரமில்லா கண்ணாடி
கண்ணடித்துக்க காட்டுகின்றதே!!
கண்களில் வழியும்
காதலை கண்டேன் என்று…!


–  செந்தமிழ் பிரியன் பிரசாந�

வெறுக்க கற்றுக்கொள்

zubix_337473.jpg

அன்பே
தடம் மாறிய உன் வாழ்வில்
தடுமாறி நீ நின்றாய்!
தரம் இல்லா என் வாழ்வில்
தாரம் வேண்டி நான் நின்றேன்!!,

ஆறுதலுக்காக நீ பேசினாய்
ஆதரவுக்காக நான் பேசினேன்!
அன்பின் பரிமாற்றம்
அலைபேசியின் வடிவில்
அடிக்கடி நிகழ்ந்தது,

சின்ன குரலில்
தினம் தினம் நீ
கொக்கிப்போட்டு பேச
அதில் வெளிவர முடியாமல்
நான் சிக்கி தவித்தேன்!!,

உன் இதமான
குரல்வளையின் ஓசையை கேட்டு
இன்பத்தில் நான் தவித்தேன்,

ஏனோ என்னிடத்தில்
உரிமைகளை நீயே
அதிகமாக்கினாய்! அதனை
உறவு என்று நீயே அழைத்தாய்!!
அதை நான் உணரும் போது
உதரிவிட்டுச் சென்றாய்!!!,

உன் உரிமையை உணர்ந்த பின்
உறவை உணர்ந்தது
என் தவறா?
இல்லை
உதரிவிட்டுச் சென்றது
உன் தவறா?
என உருகித் தவிக்கிறேன்! உன்னால்…,

தேகங்கள் ஒன்றாக சேரவந்த நேரம்
தேவையின்றி சந்தேகம்
தேடிவந்தது!,

பிறர் இடம் பேசும்போது
வார்த்தைகளால் பேசினாய்! இருந்தும்
என்னிடம் பேசும்போது
வட்ட முகத்தினால் பேசினாய்!!,

வார்த்தைகளில் இருந்தே
வெளிவர முடியாமல் தவிப்பவன்
வட்ட முகத்தில் இருந்தா
வெளிவரப்போகிறேன்!,

உன் மலர்ந்த முகமது
எதையும் மறைக்காமல்
என்ன வேண்டும் என்பதை என்னிடம்
காட்டி இருந்தால்
கண்ணீர் என்ற ஒன்றில்
உன் கண்கள் கலங்கி இருக்காது,

உரிமைகளில் உணர்வுகள்
வந்திருந்தால்
உள்ளம் உற்சாகம் அடைந்திருக்கும்!
அனால்
உரிமைகளில் புதிய உறவு
தோன்றியதைக் கண்டு
புரியாமல் தவித்தேன்!,

இருமனதாக உன் மனம் தவிக்க
அதை ஏற்க முடியாமல்
என் மனம் இருக்க
எதையே காரணம் காட்டி
ஏனோ நீ பிரிந்தாய்!,

பிரிவுகள் என்பது என்றும்
எனக்கு புதிதல்ல! ஆனால்
அதனை புரியாமல் நீ
சென்றதைத்தான் புதிதாகக் கண்டேன்!!,

தேய்வதும் வளர்வதும்
தெருவில் இருக்கும்
நிலவுக்கு வழக்கமாக இருக்கலாம்!
தேடுவதையும் வாடுவதையும்
தேகம் வழக்கமாகக் கொண்டிருந்தால்
வாழ்க்கை என்னவாகும்?,

விழிப்போகும் இடமெல்லாம்
வழியாக இருக்கலாம்! ஆனால்
வழிப்போகும் இடமெல்லாம்
வாழ்க்கைத்துணையாகுமா?!
இருக்கும் என்று நம்பினால்
அதனை ஏற்க
என் இதயம் தயாராக இல்லை!,

இருமனதாக நீ
இருக்கும் வரை
ஒருப்போதும் உன்னை
என்மனம் ஏற்காது! எனவே
வீணாக விரும்பி தவிப்பதை விட
வெறுக்க கற்றுக்கொள் என்னை…!


– செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

தீராத காதல் மாறாத காதல்

 

vjbzw_337883

தேவதை உன் தேகத்தில்
காலம் தந்து போன
கன்னத்தின் சுருக்கங்கங்கள்
கதிரவனின் கதிர்களாய் தான்
கண்மணி தெரிகிறது

சுருங்கிய உன் கண்கள்
சிதறாத காதல் பார்வையை
என் மேல் வீசிக்கொண்டே
நான் அதில் சிலிர்த்துக்கொண்டே
சிறைப்பட்டுதான் கிடக்கிறேன் உன்
சின்ன கண்களுக்குள் இன்னமும்

நரை எட்டிப் பார்க்கும்
நாட்களிலும் எனக்கு உன்
மேல் ஆசை அவ்வப்போது
எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது

என்னை சிலிர்க்க வைக்கும்
உன் சிணுங்கல்களை ரசிக்கிறேன்
என்றும் முடிவே இல்லாத
உன் முனங்கல்களையும் ரசிக்கிறேன்

சலிப்பில்லாமல் என்றும் தீராத
உன் சண்டைகளையும் ரசிக்கிறேன்
வண்டுப்போன்ற எப்போதும் நிற்காத
உன் குடைச்சல்களை ரசிக்கிறேன்

உன்னால் நிறுத்தவே முடியாத
உன்பேச்சையும்
தொடர் வண்டியாய் வரும்
உன் சச்சரவுகளையும் ரசிக்கிறேன்

வேண்டுமென்றே நீ
செய்யும் வம்புகளை ரசிக்கிறேன்
வம்பு கொண்டு சேர்க்கும்
உன் வாதத்தையும் ரசிக்கிறேன்
நினைத்தை எல்லாம்
பேசி முடித்துவிட்டு சொல்லும்
உன் போங்க போங்க என்ற
அதட்டலையும் அடங்காத
அன்பையும் ரசிக்கிறேன்

எப்போதும் என்னை வென்று
போகிறாய் நீ
எப்போதே என்னை இழந்தவன்
தானே நான்
போன போகுது சின்னப்புள்ள
என்று நகர்கிறேன் நான்
போன போகுது போங்க
என்று சிலுப்புகிறாய் நீ

வெற்றி பெற்றது
நீயா நானா
உன் அன்பா
என் அன்பா

என் வீட்டு
நீயா நானாவில்
நீ தான் எப்போதும்
வெற்றிக்கு சொந்தக்காரி …
வெற்றி பெற்றது யாரென
உனக்கு தெரியாமல்
எப்போதும் சிரிக்குது
எனக்குள் என் அன்பு !


– ஹாயா சாரல்கள்

வறுமைக்கோடு

தலையை தூக்கிப்பார் ,
விமானச் சத்தம் காதை கிழித்தது..!
சற்றே குனிந்துப்பார் ,
வீதியெங்கும் வீடாய் போனது…..!

தடகடவென ஓடும் …
ரயில்களோ துக்கத்தை தூரமிட்டது …!
அலாரம் எதுவும் எமக்கில்லை,
தினம் சூரியன் தான் எம்மை எழுப்புது ……….!

தெரு நாய்களும் உறவினர்கள்தான்,
உணவினை நாங்கள் உண்ணும்போது …!
விடியவிடிய போரிட்டாலும் .,
வெல்வதேனவோ கொசுப்படைதான்..!

தினம் நாங்கள் குளிப்பதில்லை..
இறைவனே மழையை அனுப்பிவைபான்..!
பாசம் அவனுக்கு அதிகமானால்..,
வீதியிலே நீச்சல் குட்டையை கட்டிவைப்பான் …!
ஒரு ரூபாய்க்கு அரிசி………
விலாசம் உள்ளவருக்கு தானா…?
சத்துணவு ………….
குழந்தைகளுக்கு மட்டும் தானா…?
கேள்வி கேட்டுக்கேட்டு வாய்தான் வலிக்கிறது…!

இருந்தும் ….,
கலெக்டர் கனவுடன்
கால் பரீட்சை எழுத சென்றிருக்கிறான் ,
என் மகன்
‘காலராவோடு’!!

——————————————————–
–இரா.சீ.சுகுமாரன்

முதல் வகுப்பு

unnamed (1)

தாய்ப்பால் குடித்து வளர்ந்த நான்
தமிழ்ப்பால் குடிக்க ஆரம்பித்தேன்
என் முதல் வகுப்பில்…

தவழ்ந்தபடி திரிந்த நான் என்
கால்களை மடக்கியபடி உட்கார்ந்தேன்
அமைதியாய் வகுப்பறையில்

என் பிஞ்சு விரல்களில் அப்பா
ஆசையாய் வாங்கி கொடுத்த
பலகையும், பல்பமும்
கையில் இருக்க…

அவசரமாய் அன்னை கட்டிக்கொடுத்த
திண்பன்டம் பத்திரமாய்
பையில் இருக்க…

வணக்கம் பிள்ளைகளே என்று
வாசல் நோக்கி வந்த ஆசிரியரிடம்
எழுந்து நின்றபடி கூறிய முதல் வார்த்தை
வணக்கம் டீச்சர்…..

பார்த்திடாத பல்பம் கையில் இருக்க
என்ன செய்வதென்று தெரியாமல்
தின்று கொண்டிருந்தேன்…
அதில் பாதியை..

கரும்பலகை கச்சிதமாய் என்
மடியினில் உட்கார…
ஐந்து விரல்களும் பல்பத்தை
பற்றிக்கொள்ள…

ஆசிரியர் கைப்பற்றி நான்
எழுதிய முதல் வார்த்தை
……………….அ………………….

அர்த்தம் தெரியாமலேயே
அழகாய் எழுத கற்றுக்கொண்டேன்
என் தாய் மொழியை….

எழுதிய வார்த்தையை கைப்படாமல்
கொண்டு போய் காண்பித்தேன்
என் தாய்,தந்தையிடம்

பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன்
அவர்கள் சொன்ன வார்த்தை இன்னும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது

என் மகன் டாக்டர், இல்ல இல்ல
இன்ஞினியர் என்று…

அதை நிறைவேற்றத்தான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
இன்று வரை……


பிரபுராஜ் முருகன்