வறுமைக்கோடு

தலையை தூக்கிப்பார் ,
விமானச் சத்தம் காதை கிழித்தது..!
சற்றே குனிந்துப்பார் ,
வீதியெங்கும் வீடாய் போனது…..!

தடகடவென ஓடும் …
ரயில்களோ துக்கத்தை தூரமிட்டது …!
அலாரம் எதுவும் எமக்கில்லை,
தினம் சூரியன் தான் எம்மை எழுப்புது ……….!

தெரு நாய்களும் உறவினர்கள்தான்,
உணவினை நாங்கள் உண்ணும்போது …!
விடியவிடிய போரிட்டாலும் .,
வெல்வதேனவோ கொசுப்படைதான்..!

தினம் நாங்கள் குளிப்பதில்லை..
இறைவனே மழையை அனுப்பிவைபான்..!
பாசம் அவனுக்கு அதிகமானால்..,
வீதியிலே நீச்சல் குட்டையை கட்டிவைப்பான் …!
ஒரு ரூபாய்க்கு அரிசி………
விலாசம் உள்ளவருக்கு தானா…?
சத்துணவு ………….
குழந்தைகளுக்கு மட்டும் தானா…?
கேள்வி கேட்டுக்கேட்டு வாய்தான் வலிக்கிறது…!

இருந்தும் ….,
கலெக்டர் கனவுடன்
கால் பரீட்சை எழுத சென்றிருக்கிறான் ,
என் மகன்
‘காலராவோடு’!!

——————————————————–
–இரா.சீ.சுகுமாரன்

Advertisements

முதல் வகுப்பு

unnamed (1)

தாய்ப்பால் குடித்து வளர்ந்த நான்
தமிழ்ப்பால் குடிக்க ஆரம்பித்தேன்
என் முதல் வகுப்பில்…

தவழ்ந்தபடி திரிந்த நான் என்
கால்களை மடக்கியபடி உட்கார்ந்தேன்
அமைதியாய் வகுப்பறையில்

என் பிஞ்சு விரல்களில் அப்பா
ஆசையாய் வாங்கி கொடுத்த
பலகையும், பல்பமும்
கையில் இருக்க…

அவசரமாய் அன்னை கட்டிக்கொடுத்த
திண்பன்டம் பத்திரமாய்
பையில் இருக்க…

வணக்கம் பிள்ளைகளே என்று
வாசல் நோக்கி வந்த ஆசிரியரிடம்
எழுந்து நின்றபடி கூறிய முதல் வார்த்தை
வணக்கம் டீச்சர்…..

பார்த்திடாத பல்பம் கையில் இருக்க
என்ன செய்வதென்று தெரியாமல்
தின்று கொண்டிருந்தேன்…
அதில் பாதியை..

கரும்பலகை கச்சிதமாய் என்
மடியினில் உட்கார…
ஐந்து விரல்களும் பல்பத்தை
பற்றிக்கொள்ள…

ஆசிரியர் கைப்பற்றி நான்
எழுதிய முதல் வார்த்தை
……………….அ………………….

அர்த்தம் தெரியாமலேயே
அழகாய் எழுத கற்றுக்கொண்டேன்
என் தாய் மொழியை….

எழுதிய வார்த்தையை கைப்படாமல்
கொண்டு போய் காண்பித்தேன்
என் தாய்,தந்தையிடம்

பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன்
அவர்கள் சொன்ன வார்த்தை இன்னும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது

என் மகன் டாக்டர், இல்ல இல்ல
இன்ஞினியர் என்று…

அதை நிறைவேற்றத்தான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
இன்று வரை……


பிரபுராஜ் முருகன்

விவசாயி மகன்

உழவன் மகனே
உள்ளம் வருந்தாதே
ஊருக்கே சோறிடும் உன்தந்தை
உனக்கு மட்டும் தந்தையல்ல
உண்போர் அனைவருக்கும் தான்..

நீ
உழவன் மகன் என்பதாலா
உனை ஒருத்தி வெறுக்கின்றாள்?

அரசபணி செய்தும் கூட
மணக்க உன்னை மறுக்கின்றாள்
நாட்டின் தலைவர்களே
உழவன் மகன் என்பதை
உளம்மகிழ்ந்து கூறும்போது
வீட்டின் தலைவிக்கு
விவசாயி மகனென்ற
விலாசம் பிடிக்காததேன்…??

ஆகாயத்தில் இருந்துதான்
வந்தவளா அந்தவளும்
ஆகாரம் உண்ணாமல்
வாழலாமா எந்தவளும்
விவசாயி பெற்றவனை
விரும்பவில்லை போகட்டும்…

அவன்
விளைவிக்கும் ஆகாரம்
விரும்பி உண்பதேன்?
என்ன நியாயம் ??
இது என்னஅநியாயம் ???

விந்தை உலகில் இன்று…
விவசாயம் சிலருக்கு
விபச்சாரம் போலாச்சு
அபச்சாரம் அபச்சாரம்
அவளுடன் நீ வாழுவது
எறும்புக்கும்கூட
இன்னாது செய்யா உந்தன்
இதயத்தை உடைத்து விட்டாளே
துரும்புக்கும் இடமின்றி
மணப் பேச்சை
துப்புரவாய்த் துடைத்து விட்டாளே…

தர்சனே நீ
உழவன் மகன் என்பதை
உரத்துச் சொல்லு !!
புரிந்த ஒருத்தி
பூமாலையுடன் வருவாள்.

குறுகிய மனத்தாளோடு
குடித்தனம் சரி வராது
உன்
உருகிய மனதுக்கு
ஒத்தடம் அது தராது.

கேவலம்
அப்பாவின் தொழிலை வைத்து
அன்பை அளந்து பார்க்கிறாளே
நீ தப்பித்தாய் மகனே
தலை முழுகு இன்றே போய்
தந்தையின் தொழிலை
தராதரமாய்க் கொள்வோளை
தாரமாய் நீ ஏற்றால்
பாரமாய்த்தான் போகும் வாழ்க்கை…

நல்ல வேளை
பேச்சுடன் மட்டும்அது
பெயர்ந்து போய் விட்டது
இல்லையேல்
மூச்சுள்ள வரை நீயும்
முணு முணுப்புக் கேட்க வேண்டும்!!

விவாகம் என்றால் நிறம்தீட்டும்
விளையாட்டில் ஒரு வகையா
விவசாயத்தால் அதன்
சாயம் மாறிப் போவதற்கு
உக்கிரமாய் யோசிக்காதே
வக்கிர மனம் கொண்டோள்
வாழ்ந்து விட்டுப் போகட்டும்
உனக்கென்று ஒருத்தி
உலகில் பிறந்திருப்பாள்
அதை எண்ணி நீயும்
ஆறுதல் கொள் மகனே……


ஏ.ஆர். பைசல்

சில துரோகம் பல துரோகிகள்

நஞ்சை புஞ்சை எல்லாம்
நரகமென ஆட்சியில்
உள்ளவரெல்லாம்
மிருகமென

அணை போட்டு தடுக்கும்
அநியாயத்தை கேட்க
யாருமில்லை

வக்கற்றவர்களுக்கெல்லாம்
வாக்களித்து
நடு தெருவில் நாம்

ஆயிரம் தீர்ப்பு எழுதியும்
தண்ணீர் பெற்று தர
துப்பற்ற சட்ட மேதைகளே
இங்கே சாப கேடு

ஆறு வற்றுவதும்
அதிர்ஷடம் என
இருக்கும் மணலையும்
விற்று பிழைக்கும் நாய்கள்

விவசாயியின் மரணத்தையும்
மறைத்து நிவாரணத்தை
மிச்ச படுத்தும்
அரசு

இலவசத்திற்கு ஆசைபட்டு
தவணை முறையில்
தண்டனை பெறும்
நாம்

சில தாலிகள் அறுந்தாலும்
பரவாயில்லை
தாலிக்கு தங்கத்திற்காய்
சாரயம் விற்று
சம்பாதிக்கும் அரசு

எப்போ வேண்டுமானாலும்
கவிழும் ஆட்சி

அதுவரை தாங்கி பிடிக்கும்
கூவத்தூரார்கள்

வருமான வரி சோதனை
ஒன்று போதும்
மந்திரிகளின் வாயை அடைக்க

மத்திய அரசே
கவலை கொள்ளாதே

தன்னை காத்துகொள்ளவே
எம்மை விற்கவும்
தயங்காத ஆட்சியாளர்கள்
உன் பின்னே

நாங்கள் அழுதாலும்
இறந்தாலும்
துடி துடித்தாலும்
சிரித்து கொண்டே
வேடிக்கை பார்ப்பார்கள்
உன்னை போலவே

காவிரியை தடுத்தால்
தறிசாக மட்டுமே மாறும்
மீத்தேனையும் எடுத்துவிடு
மொத்தமும் பாலைவனமாகும்
மாடுகளை கொன்றுவிட்டு
ஒட்டகம் மேய்க்க பழகி கொள்கிறோம்

அப்பொழுதாவது
தீருமா உன் பசி

இங்கே உன்னை
எதிரக்க கூட
இல்லை இல்லை
எங்களுக்காய்
பேச கூட நாதியில்லை

வாக்கை விற்று
வாழ்க்கையை தொலைத்தவர்கள்
நாங்கள்

இதுதான் விதி

ஒரு தியானத்திற்கும்
ஒரு சபதத்திற்கும்
ஒரு சட்டை கிழிப்பிற்கும்
சில கூவத்தூரார்களுக்கும்
மத்தியில்

உயிருள்ள ஜடமாய்
நாங்கள்

————————————————–

ந.சத்யா

பத்துமாதம் சுமந்தவளே

ptghe_326941

அம்மாவுன் பாசத்திற்(கு) அளவுகோல் உலகிலில்லை
விம்மியழும் நெஞ்சத்திற்(கு) ஆறுதல் வேறாருமில்லை !

பட்டம்நான் பெற்றுவிட்டால் பட்டதுயர் போகுமென்று
பட்டணத்தில் படிக்கவைக்கப் பாரத்தைச் சுமந்தாயே !
கட்டியவன் போனாலும் கண்ணீரைத் துடைத்துவிட்டுத்
தட்டாமல் கேட்டவற்றைத் தயவுடனே அளித்தாயே ! (அம்மாவுன் )

பத்துமாதம் சுமந்தவளே ! பாசத்தால் நனைத்தவளே !
உத்தமியே எனக்காக உருக்குலைந்து போனாயே !
சொத்துபத்து அத்தனையும் துடைத்தெடுத்து விற்றுவிட்டாய்
எத்தனையோ அல்லலுற்றாய் எனக்காகப் பொறுத்தாயே ! ( அம்மாவுன் )

வேலையேதும் கிடைக்கவில்லை விதியைநொந்து பலனுமில்லை
சோலைமலர் மணக்கவில்லை சோகமதை மாற்றவில்லை
தாலாட்டி வளர்த்தவளைத் தவிக்கவிட எண்ணமில்லை
பாலைவனம் போலுள்ளம் பசுமையின்றித் துடிக்கிறதே ! ( அம்மாவுன் )

ஓயாமல் தேடுகிறேன் உழைப்பதையே வேண்டுகிறேன்
நாயாகத் திரிகின்றேன் நல்லபணி கிட்டவில்லை
தாயாரைக் காப்பாற்ற தனயனுக்குக் கடமையுண்டே
ஆயாசம் தானடைந்தேன் ஐயோநான் என்செய்வேன் ??? (அம்மாவுன் )

———————————————————-

சியாமளா ராஜசேகர்

கடந்தகால நினைவுகள்

fnprb_326144

கடந்தகால
நினைவுகளைச்
சுமந்துகொண்டு
கடந்து
போகிற….. நிகழ்கால
தனிமை…..எப்போதும்
இனிப்பதில்லை…..
எவருக்கும்…..!!

தனிமை
சுகமென்று
கவிபடிக்க
களத்தில்
பலபேர்
உண்டு…..நிஜத்தில்
யாருமில்லையே……!!?

இந்த
தனிமைதான்
எனக்கு
கிடைத்த
ஆயுள்தண்டனையா…..?
என்றே
எண்ணத்தோன்றும்
என்னுடைய
தனிமை…..!!

வாழ்க்கை
ஒரு
போராட்டம்
தான்…..இங்கே
போராட்டத்தால்
வாழ்க்கையை
வீணாக்கி
நின்றேன்
விரக்தியில்…..!!

விதியில்
பழிபோடவும்
விருப்பமில்லை….
என்மேலும்
தவறுண்டு
என்றுணர்ந்து……!!

உந்தன்
அன்பின்
அரவணைப்புக்களை
தவறவிடும்
ஒவ்வொரு
நொடியும்
மரணப்படுக்கைதான்
எனக்கு……!!

என் விழிகளில்
வசிப்பவளே
எந்தன்
விழிநீரை
ஏனடி
விரயமாக்குகிறாய்?
காலமெல்லாம்
சுமப்பேன்…..
காதலை
என்று வாழ்ந்தேன்…..
கடைசிவரை
கவலைகளை
மட்டும்
சுமக்கிறேன்……!!

விழி
மூடினாலும்
விழி
திறந்தாலும்
வேதனை
சரிபாதிதான்…..என்
கண்ணே
என்னுள்ளே
என்றும்
நீதானடி…..!!

வானம்
திறந்துதான்
கிடக்கிறது……
வர்ணம்
பரந்துதான்
இருக்கிறது…..
எல்லோர்க்கும்……எனக்கு
மட்டும்
முன்னிருட்டு…..!!

உந்தன்
திசைகள்
அறியாமல்
எந்தன்
ஆசைகள்
அடியோடு
அழிந்தே
போகுது…..அன்னை
தந்த
ஆயுள் உன்னை
நினைத்து
போய்விடுமே……!!!

உறக்கம்
தொலைந்து
மூன்று
நான்கு
ஆண்டுகளாச்சு…..
மீண்டும்
மீண்டும்
தொலைவாய்
போனது
தூக்கம்……
தூரம்
நின்று
துயரமாய்
ஆகிப்போன
நம்
வாழ்க்கையால்……!!!!!!!!!

-thampu

————————————

அவளுக்காக ஒரு மடல்

pztyf_310663.jpg

வணக்கம்!
என்னைச் சாய்க்கும், சாய்த்துக்கொண்டிருக்கும்
சாய்க்கப் போகும் இமைகளைக் கொண்டவளுக்கு.
நான் உங்களிடம் பேசுவதாக எழுதும்
இந்த எழுத்துக்கள் உங்களைச் சேரப்போவதில்லை.
ஏதோ ஒரு நம்பிக்கையில் இதை உணர்வீர்கள்
என்று எழுதுகின்றேன் கேளுங்கள்.

உங்கள் அழகென்று எடுத்துக்கொண்டால் அதன்
அருகினில் நிற்கக் கூட தகுதியற்றவன் நான்.
உங்களின் செல்வத்தைக் கணக்கில் கொண்டால் உங்கள்
நிழலைக்கூட நெருங்கத் தகுதியற்றவன் நான்.

இப்படி எவ்வளவோ முரண்பாடுகள் இருவருக்கும்
இருந்தும் உங்களின் விழிகளை நாடும் எனது
விழிகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நானும்
சேர்ந்து காத்திருக்கத் தொடங்கிவிட்டேன் நீங்கள்
வரும் வழி பார்த்தது.

உங்கள் பார்வைகளுக்காக இருபத்தெட்டு வயதிலும்
ஒரு பத்து வயது குறைந்த இள வயது இளைஞன்
போல தேடித்தேடி காத்திருக்கத் துவங்கிவிட்டேன்.
எனக்கே ஒருசில நேரங்களில் இது முட்டாள்த்தனமாய்த்
தோன்றும் ஒன்றென்றாலும் அதில் இருக்கும் இன்பத்தை
இழக்க மனமில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

எந்தன் வருத்தும் பார்வைகளுக்காக உங்களிடம்
பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டேன்.
நீங்களும் புன்னகைத்துக் கொண்டே ஏற்றுக்கொண்டீர்.
அதற்குமேல் பேச மனமில்லாமல் பதட்டத்துடன்
திரும்பி வந்து வருத்தப்பட்டுக் கொண்டேன்
இருந்த இன்பத்தை இழந்துவிட்டவனாய்.

உங்களை பார்க்கத் தவிர்ப்பது மாதிரி நடிக்கத்
தெரிந்த எனக்கு நினைக்காமல் இருப்பதுபோல்
உண்மையிலும் நடிக்கத் தெரியவில்லை. – நீங்கள்
வரும் வழிகளில் ஏதோ ஒரு மறைவில்
உங்களை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பேன்
இதையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எனக்கும் நன்றாகவே தெரியும் இதுவும்
இழக்கப்போகும் ஓர் இனம்புரியா இன்பமென்று.
இந்த இன்பத்தை நீங்கள் உணரப்போவதும் இல்லை!
உங்களால் உணரவும் முடியாது.- ஏனென்றால்
இது எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று.

நீங்கள் படைக்கப்பட்டது எனக்காக என்று
என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது.
ஒருவேளை எனக்காக என்று இருந்தால்
என் மகிழ்ச்சியை யாராலும் அளவிட முடியாது.
காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீங்கள் கிடைக்காமல் போனால்
எனக்காக வருபவளை உங்களை எப்படி
வைத்திருப்பேனோ அதைவிடவும் ஒருபடி மேலேயே
வைப்பேன் என்பதை உறுதியகச் சொல்ல இயலும். – அது
நீங்களாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறன்.

ஏமாற்றம் என்பது எந்தவகையிலும் எனக்குப் புதியதல்ல.
என்று ஏமாறப்போகின்றேன் என்ற நாளை நோக்கிக்
காத்திருக்கும் நான்.


சிவராமகிருட்டிணன்

நண்பா..

images

நண்பா கடவுள் எனக்கு
அளித்த காணிக்கை நீ
நீ இருக்கையில் என்ன
கவலை இனி எனக்கு
இன்பமாய் நகரும்
இனிமையாய் முடியும் என்
நாட்கள் அனைத்தும் !

வாழ்நாளில் ,
நான் நினைத்து மகிழும்
நீங்காத என் நினைவுகளின்
ஓட்டுமொத்த நினைவுகல் நீ !

கடவுளுக்கும் கிடைக்காத பரிசு
நண்பன் , எந்த நண்பனுக்கும்
கிடைக்காத நண்பன் என்
நண்பன் நீ !

ஈன்ற தாயின் அன்பும்
ஈன்ற தந்தையின் அறிவும்
உடன் பிறந்தோர்களின் அணைப்பும்
உன் உருவில் கண்டேன்
ஒன்றாய் !

உன் அன்னை படைத்தாள்
உன்னை ஒரு முகத்தோடு
ஆனால் பன்முகம் கொண்டாய் எனக்காக
என் காதலின் தூதுவனாய்
என் மணநாள் தோழனாய்
என் எதிரிகளின் எதிரியாய் நீ நண்பா !

போட்டி உண்டு எங்களுக்குள்
யார் அன்பு செலுத்துவதில் அதிகம் என்று
பொறாமை உண்டு எங்களை
பார்க்கும் மற்றவர்களுக்குள் யார் இவர்கள்
நிகழ்கால கர்ணனா – துரியோதரன
என்று !

நம் நட்பிற்கு மரணமே
இல்லை நண்பா
நம் நினைவுகளால் மட்டும்
இல்லை நண்பா
நம் நட்பை பற்றி என்றும்
பேசும் மனிதர்களின் மூலமாகவும்
தொடரும் பல நூற்றாண்டுகளை
கடந்தும் !


அன்னை ப்ரியன் மணிகண்டன்

நினைவில் கலங்குகிறேன்..

pagrs_300185

உன்னை நினைத்து
நினைத்துத்தான்
நித்தமும்
கலங்குகிறேன்…..
எதிரியே
தெரியாத
தேசத்தில்…..யுத்தம்
புரிகிறேன்…..!!

நான் மடிந்து
போனாலும்
உன்நினைவுகள்
முடிந்து
போகாது…..மீண்டும்
மீண்டும்
நினைவலைகளாய்
நெஞ்சில்
வாழும்……!!

மலரும்
பூக்கள்
எல்லாம்
மாலை ஆவதில்லை…..
உள்ளத்தில்
உதித்த
காதல்
எல்லாம்…..கரை
சேர்ந்ததில்லை……மாறாக
கவலைகளையே
தந்து
தொலைக்கிறது……!!

என் சிந்தனையில்
நிலைத்தவளே…..
என்னை
சிதையில் போட்டாலும்
சீக்கிரம்
உன்னைத்
தொலைக்க
மாட்டேன்……!!

நம்மை
மறந்து
நாம்
வாழ…..இந்த
ஜென்மத்தில்
எங்கேயும்
இடமில்லை…..
அப்படியும்
மறந்தால்
இந்த
ஜென்மத்திலேயே
நாம்
இல்லை…..!!

காதலின்
வலிகளோடு
ஒருசில
வரிகள்……
பேனா மை
கொண்டு அல்ல…..
என் கண்ணீரின்
ஈரம் கொண்டு……!!


thampu

அர்த்தம் இல்லாதவைகள்..

kqhcw_282484

நான் நானாகவும் இருக்கிறேன்
நான் நீயாகவும் இருக்கிறேன்
———————————————
நடக்கின்ற பூ வனம் நீ
நடமாடும் கல்லறை நான்
———————————————
“உன்னை பிடிக்கவில்லை”
என்று நீ சொன்ன சொற்கள்
வார்த்தை பிழைகள் தானே
———————————————-
இனி தவணை முறையில் மரணம்
எனக்கு
என் கைபேசியில் உன் புகைப்படம்
பதிவிறக்கம்
———————————————–
நீ பார்த்த நொடிகளுக்கா,
நீ பார்க்க இமைத்த இமைகளுக்கா,
எதற்கு தர தண்டனை
எதற்கு தர பரிசு
———————————————-
வாட்சப் திரைக்குள் எப்போது வந்து சேருவாய்
நெருங்குகிறேன் நொடிக்கு நூறு முறை நீ எப்படி….
———————————————–
உன் நினைவுகளை தூக்கிப் போட்டும் பின்பு,
பிடித்தும் விளையாடுகிறேன்
இடைப்பட்ட வெளியில்
(வலிப்பட்டு) இன்னும் மிச்சமுள்ளது என் காதல்
——————————————————
நேசத்தின் விளிம்புக்கு
அப்பால் பள்ளம் அல்ல
குழி தோண்டு
இனி நான் வாழ்வது உறுதி இல்லை.
—————————————————–
கனத்து போனது மனம்
காரணம் நீ தான்
கவித்துவமாகி போனது மனம்
இதற்கும் காரணம் நீ தான் ……
——————————————————-
நீ இல்லா நாட்கள் இனி எப்படி
இப்படி நான் நினைத்துக்கொண்டிருப்பதே
என் கல்லறையில் தானோ……….
———————————————–

ஆனந்தி