கடவுள் சொன்னது…

where-is-God-png-e1506969346521

முகம் தெரியாத
ஒருவரின்
தோல்விக்கு கூட 
நான் அழுகிறேன்.
என் தோல்விக்கு
கடவுள் கலங்குவான்
என்ற நம்பிக்கையில்…

முகம் தெரியாத
ஒருவரின்
பசிக்கு கூட
நான் சோர்கிறேன்.
என் பசிக்கு
கடவுள் சோரிடுவான்
என்ற நம்பிக்கையில்…
இப்படி…
அடுக்கடுக்காய்
அடுத்தவர்களின்
துயரங்களை
என்னுடையதாக்கிய பிறகு…
ஒரு நாள் கடவுளை
சந்திக்க நேர்ந்தது .
கடவுளிடம் கேட்டேன்…
உங்களை எளிதில்
சந்திக்க வழியில்லையா?

ஓ..வென்று அழுதவர்
சொன்னார்…

அடுக்கடுக்காய் …
துயரங்களை பார்த்து
வலிகளில் மூழ்கி
கண்ணீரில் மிதந்து
ரத்தங்களில் உறைந்து
உறவுகள் வீசிய
அமிலத்தில் சிதைந்து
பக்குவபட்ட மனங்களிடம்
மண்டியிட்டு கிடக்கிறேன்.

தயவு செய்து
என்னை பார்த்ததாக
யாரிடமும் சொல்லாதே…
என்றான்.


– யாரோ

தொலைந்த சிறு வயது

நண்பா…….
எப்படி இழந்தோம்
என்பது தெரியாமலேயே
தொலைந்து போய்விட்டன
அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து
உப்புநீரில் குளித்தால்
மேனி கருக்குமென்ற
அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி
வியாபாரி தோட்டத்து
நன்னீர் கிணறு அதிர
குதித்தாடிய ஈர நாட்கள்…

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய
உறுமீனுக்காய்த் துள்ளி
விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்
பீற்றிக்கொண்ட நாட்கள்…

கவட்டைக் கொம்பொடிய
நுங்கு மட்டை வண்டியுருட்டி
சக நண்பர்களுடன்
தோற்றும் ஜெயித்தும்
விளையாடிய நாட்கள்…

மொட்டுவிட்ட
தட்டாஞ்செடிகளில்
பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை
காத்துக் கிடந்து
நாவூறப் பறித்து
ருசித்த நாட்கள்…

நினைத்தாலே நினைவுகளில்
ஈரம் சுரக்கும்
பிள்ளைப் பிராய நாட்களை
தொலைத்துவிட்டு..

கைகளை விரித்தபடி
ஓடிவரும் குழந்தைகளை
வெறுமை பூசிய நாட்களால்
வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்
இப்போது!

______________________________________________________________________

முத்துக்குமார்

உழவனை உயர்த்துவோம்

urqsp_342976

எங்கள்
பசியின்வலியை உணர்ந்து;
உங்கள்
வாழ்க்கை வழியை மறந்து;
சேற்றில் கால்வைத்தீர்களே…….
உழவர்களே…..
நீரே எம் தோழர்கள்!!!!

பதவியைத் துறந்து;
பணத்தினை மறந்து;
மனிதநேயத்துடன் வாழும்,
உன்னத உழவர்களே…..
நீரே எம் இறைவன்!!!!!

“தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்“
என்றான் மகாகவி பாரதி.
ஆனால்
“உலகிற்கே உணவளிக்கும்
உம்மைப் போல
உவமை ஒன்றுமில்லை ஐயா!!!”

நீவீர் படும்துன்பமும் அறிவேன்..
அத்துன்பத்திலும் ,
மனம் கல்லாய் போன மனிதனுக்காக
உழைக்கும் ,உம்
உயரிய எண்ணமும் அறிவேன்

மக்களுக்கு ஓர் வேண்டுகோள்….

உழவனைப் போற்றி;
அவன் துன்பம் உணர்ந்து
உதவிடுங்கள்…
அவன்
நல்லெண்ணம் உணர்ந்து…
வணங்கிடுங்கள்!!!!

_____________________________________________________________________

பானுமதி

முதல் வகுப்பு

unnamed (1)

தாய்ப்பால் குடித்து வளர்ந்த நான்
தமிழ்ப்பால் குடிக்க ஆரம்பித்தேன்
என் முதல் வகுப்பில்…

தவழ்ந்தபடி திரிந்த நான் என்
கால்களை மடக்கியபடி உட்கார்ந்தேன்
அமைதியாய் வகுப்பறையில்

என் பிஞ்சு விரல்களில் அப்பா
ஆசையாய் வாங்கி கொடுத்த
பலகையும், பல்பமும்
கையில் இருக்க…

அவசரமாய் அன்னை கட்டிக்கொடுத்த
திண்பன்டம் பத்திரமாய்
பையில் இருக்க…

வணக்கம் பிள்ளைகளே என்று
வாசல் நோக்கி வந்த ஆசிரியரிடம்
எழுந்து நின்றபடி கூறிய முதல் வார்த்தை
வணக்கம் டீச்சர்…..

பார்த்திடாத பல்பம் கையில் இருக்க
என்ன செய்வதென்று தெரியாமல்
தின்று கொண்டிருந்தேன்…
அதில் பாதியை..

கரும்பலகை கச்சிதமாய் என்
மடியினில் உட்கார…
ஐந்து விரல்களும் பல்பத்தை
பற்றிக்கொள்ள…

ஆசிரியர் கைப்பற்றி நான்
எழுதிய முதல் வார்த்தை
……………….அ………………….

அர்த்தம் தெரியாமலேயே
அழகாய் எழுத கற்றுக்கொண்டேன்
என் தாய் மொழியை….

எழுதிய வார்த்தையை கைப்படாமல்
கொண்டு போய் காண்பித்தேன்
என் தாய்,தந்தையிடம்

பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன்
அவர்கள் சொன்ன வார்த்தை இன்னும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது

என் மகன் டாக்டர், இல்ல இல்ல
இன்ஞினியர் என்று…

அதை நிறைவேற்றத்தான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
இன்று வரை……


பிரபுராஜ் முருகன்

வண்ணக்கோலம்..!

wpjot_262542

தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!

கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!

வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!

ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!

வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!

ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!

புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்.!

தமிழ் பெண்கள் வாசல்தான்
புண்ணியபூமி.!

கன்னிப்பெண்ணின்
கோலம் புக முடியாத
ஒரு பூவின் கோபம்
பூசணி ஆனது.!

பெண் வரையும் பூக்கோலம்தான்
பின்னாளில் பூகோளமானது.!

நட்சத்திரங்கள்
பார்க்கையில்தோனும்
வளையல் கைகளுக்கு எட்டியிருந்தால்
இந்த வானம் எவ்வளவு அழகாக
இருந்திருக்கக்கூடும் என்று.!

பூவைத்த கோலத்தோடு
கோலத்தில் பூ வைக்கும்
மார்கழிப்பெண்கள்
அதிகாலைச்சூரியனோடு
அதீத சினேகம் கொண்டவர்கள்.!

கலிலியோ
தமிழ் வீதியில் நின்று
இதைத்தான்
சொல்லி இருக்கக்கூடும்
பூமி கோலவடிவமானதென்று.!

எட்டுப்புள்ளி
ஏழுவரிசைக்கோலத்தில்
ஆறாவது புள்ளிக்கு மேல்
அழகு கூடிக்கொண்டுபோகும்
அவள் வளைவுகளில்..

இப்படி உடல்வளைத்துக்
கோலமிட்ட
என் தமிழ் பெண்கள் குறைந்து
இன்று உடல் குறைக்க
நடந்து போகிறார்கள்
தெருவெங்கும் நாய்களோடு.!

—————————————————————————–

நிலாகண்ணன்

சில கேள்விகள்..

qkulr_256325

நீதி தேவதையே, என்னுள்…
அறியாமல்…சில கேள்விகள் !
அறியாமையால்…சில கேள்விகள் !

நிரபராதி, குற்றவாளி எனும் முத்திரைகள்…
அவரவர் செய்த செயல்களா ?
வாதாடுவோர் வாக்குத் திறமைகளா ?

உயிர் உறிஞ்சும் குற்றங்கள்….
தவறென்று தீர்ப்பான பின்னே,
சரியென்று மறுமுறை மறு தீர்ப்பாகுமா ?

செய்யாத குற்றத்தில் சின்னா பின்னமாகும்…
அப்பாவிகள் இழந்த வாழ்வும், நேரமும்…
எந்த சட்டமும் மீட்டுத் தருமா ?

உன் கண்ணில் துணிக்கட்டு….
நீதி பாரபட்சம் பார்க்காதது என்பதாலா ?
நிரபராதி படும்பாடு பார்க்கச் சகிக்காததாலா ?

கட்டுகளை கழட்டி எறிந்து…
குற்றங்களை வேரறுக்க நீயே…
நேரில் வாளெடுத்து வரக்கூடாதா ?

கடைசியாக ஒரு கேள்வி !
கண்கள் அறியா கடவுளுக்கு கண்களில்லையா !!
கலிகாலத்தில் கடவுள் சக்தி எடுபடாதா ?

அமுதா

உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான் ..!

gsqfm_249367
ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரன்
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .

பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?

பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? – இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?

சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?

அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?

ஏழைகள் மேல் இரக்கம்கொண்டு
என் இருப்பிடம் அழைத்தேனா .?
என்னிடம் இருப்பதை கொடுத்துவிட்டு
அவர்கள் போல் வாழ்ந்தேனா .?

எதுவுமே செய்ததில்லை இதுவரை இந்த பாவி .
இதைகூட கிறுக்கிவிட்டேன்
கவிதை என்று எண்ணி .!!!!

என் கவிதை.!

என் கவிதை…
என் சோகம் சொல்லும்
என் காதல் சொல்லும்
என் கனவை சொல்லும்
என் கண்ணீர் சொல்லும்
என் கவிதை நல்ல கருவை கொண்டதோ இல்லையோ
என் உயிரைக் கொண்டது
கவிதை எழுத முயலாவிடின்
என்றோ என்றோ நான் இறந்திருப்பேன்.

மறவாத நினைவுகள்.!

Image

வெற்றிடத்தை
நான் பார்க்கிறேன்
வேற்றுமைகள் இல்லா
உள்ளத்துடன்
சிறுவதில்
குழந்தையாக………..!

இரவு பகலும்
எப்படி செல்கிறது எனக்கு
ஒன்றும் தெரிந்ததில்லை
எனது கவனம்
விளையாட்டில்………………!

பசித்தால்
வீடு வருவேன் என்
அன்னை
வீட்டு வாசலில்
என்றும் காத்திருப்பாள்
எனக்காக………………!

உழைப்பது
எப்படி என எனக்கு
தெரியாது – எனது
வருமானம்
என் தந்தை
சட்டை பை……………!

காசுகொடுத்தால்
கடலைமிட்டாய் என் வீட்டு
அருகாமையில்
பெட்டி கடை…………..!

விளையாடுவேன்
விரைந்து ஓடுவேன் – என்
அருகில் என்றும்
எனது நண்பர்கள்………….!

எத்தனை முறை
சாப்பிட்டாலும் தேகிட்டாத
புளி மாங்கா
அடுத்த வீட்டு
தோட்டத்தில்…………..!

டெண்டு
கொட்டாய் சினிமா
டிக்கெட்
எடுக்காமல் கீத்துவழியே
சென்று
திருட்டுப்படம்
பார்த்த நாட்கள்…………!

எனது நினைவில்
என்றும் நீங்க நினைவுகளாக
குடிகொண்டுவிட்டது………….!

நான்
தற்போது அலுவலகத்தில்
பணிபுரிகிறேன்………….. !