இரவும் வானமும் போல

kjgna_343314

வாழ்க்கை
எதற்குமே நமக்கு
சமயங்களைக் கொடுக்கவில்லை
நம் சந்திப்பின்
இடைவெளிகளே தீர்மானிக்கும்
உனக்கு என்னால்
அந்த கிடைத்த நேரத்தில்
என்ன கொடுக்க இயலும் என்பதை

என்றாவது ஒருநாள்
ஒரு சாலையில் வைத்து உன்னை சந்திக்கநேரிடும்
அச்சமயம்
நமக்கு நம்மிடமென்று
சொல்லி அழவோ
பகிர்ந்துகொள்ளவோ நிறைய இருக்கலாம்
அதற்கான
அதிகபட்ச சமயங்கள்
அங்கு இல்லாமல் போகும்
கிடைக்கின்ற நிமிடங்களில்
எப்போதுமான, அழகிய புன்னகை மாறாமல்
ஹாய், ஆர் யூ ஆல்ரைட்
என்றுவிட்டு
அந்த இடம் விட்டு நகர்ந்துவிடுவேன்
புரிந்துகொள்,
அந்த சூழலுக்காக, மன்னித்துக்கொள்

அதிக பட்சம்
ஒரு காஃபி ஷாப்பில்
இருவர் மட்டுமே இருக்கும் மேசையில்
எதிரெதிரே அமர்ந்து
நானும் நீயும் காஃபி பருகும் வாய்ப்பு உருவாகலாம்
அப்போதும் கூட
நமக்கு
பகிர்ந்துகொள்ளவோ
சொல்லிக்கொள்ளவோ நிறைய இருக்கும்
அதை விட்டுவிடலாம்,
பதிலாக
உன் சமயங்களில்,
ஒரு பத்து நிமிடங்களைக்கொடு
உன் வாழ்நாளில்
நீ மறக்க முடியாதது மாதிரி
அதை அழகாக்கி
திரும்ப உன் கைகளுக்கே
கொடுத்துவிடுகிறேன்
பெயர்த்தெரியாத ஒரு புதுப்பூவின் வாசனையை
உன்னைச்சுற்றியெங்கும்
தூவிவிட்டு
அங்கிருந்து காணாமல் மறைந்துவிடுகிறேன்

நீ இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
அந்த சாலையின் முதல் வளைவில் சென்று
ஒரு தொலைவில்
கரும்புள்ளியாகி மறையும்வரை
அந்த வாசனை,
உன்னிடமிருந்து இடம்பெயராமல் இருக்கட்டும்
அந்த நேரமின்மையை
புரிந்துகொள்

ஒருநாள்
உன்னிடம் நானும் என்னிடம் நீயுமென
முழுதாக
புதைந்துகிடக்கும் முழுநீள இரவொன்று கிடைக்கும்,
தொடுக்காத
மலர்க்கூட்டங்களுக்கிடையில்
தோள்பட்டையும் மார்பும்
தருகிறேன்,
உன் முகம் திறக்கும்
அந்த இருளிற்கு
அன்று விடுப்புக்கொடுத்துவிடலாம்
பேசிக்கொண்டே இரு,
இந்த உணர்வுகள்
என்னிடம் மட்டுமே
கிடைப்பதாக
அன்றெல்லாம் சொல்லிக்கொண்டே இரு…

_______________________________________________________________________

அனுசரன்

உனக்கொரு கவலை வேண்டாம்

 

nrpft_338221.jpg

என்னவளாய் இருந்தவளே
உனக்கொரு கவலை வேண்டாம்
உன் நினைவு என் இதய கடிகாரத்தில்
சற்றுத் தளர்ந்தே தான் ஓடுகிறது
உன்னை மறக்க தொடங்கி விட்டேன்

நாம் எடுத்த புகைப்படங்கள்
யாவும் புகையாகி விட்டன
உன் பெயரை யாரும் உச்சரிப்பின்
நான் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை
உன்னோடு சேர்ந்து சென்ற இடங்கள்
தனிமையில் கூட அழகாய் இருக்கின்றன
கனவுகளில் கூட நான் உன்னை
நினைப்பது இல்லை

கவலையோ கண்ணீரோ
வீட்டாரிடம் சொல்லத் தொடங்கி விட்டேன்
இப்போது செல்பிக்கு கூட
நண்பர்கள் இருக்கிறார்கள்
முகப்புத்தகத்தில் உன் அப்டேட்
பார்த்து கூட நாட்கள் ஆகி விட்டன
இப்போது கொஞ்சம் வேலைக்கும்
நேரம் ஒதுக்குகிறேன்
உன்னைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம்
கிடைப்பதில்லை

உனக்கு இனிமேலும் கவலை
வேண்டாம்
நம் இறந்த காலம் பற்றி
நான் இறந்தாலும்
சொல்லமாட்டேன்
உன் கணவனாகும் என் நண்பனிடம் ………..


– தமிழரிமா

வெறுக்க கற்றுக்கொள்

zubix_337473.jpg

அன்பே
தடம் மாறிய உன் வாழ்வில்
தடுமாறி நீ நின்றாய்!
தரம் இல்லா என் வாழ்வில்
தாரம் வேண்டி நான் நின்றேன்!!,

ஆறுதலுக்காக நீ பேசினாய்
ஆதரவுக்காக நான் பேசினேன்!
அன்பின் பரிமாற்றம்
அலைபேசியின் வடிவில்
அடிக்கடி நிகழ்ந்தது,

சின்ன குரலில்
தினம் தினம் நீ
கொக்கிப்போட்டு பேச
அதில் வெளிவர முடியாமல்
நான் சிக்கி தவித்தேன்!!,

உன் இதமான
குரல்வளையின் ஓசையை கேட்டு
இன்பத்தில் நான் தவித்தேன்,

ஏனோ என்னிடத்தில்
உரிமைகளை நீயே
அதிகமாக்கினாய்! அதனை
உறவு என்று நீயே அழைத்தாய்!!
அதை நான் உணரும் போது
உதரிவிட்டுச் சென்றாய்!!!,

உன் உரிமையை உணர்ந்த பின்
உறவை உணர்ந்தது
என் தவறா?
இல்லை
உதரிவிட்டுச் சென்றது
உன் தவறா?
என உருகித் தவிக்கிறேன்! உன்னால்…,

தேகங்கள் ஒன்றாக சேரவந்த நேரம்
தேவையின்றி சந்தேகம்
தேடிவந்தது!,

பிறர் இடம் பேசும்போது
வார்த்தைகளால் பேசினாய்! இருந்தும்
என்னிடம் பேசும்போது
வட்ட முகத்தினால் பேசினாய்!!,

வார்த்தைகளில் இருந்தே
வெளிவர முடியாமல் தவிப்பவன்
வட்ட முகத்தில் இருந்தா
வெளிவரப்போகிறேன்!,

உன் மலர்ந்த முகமது
எதையும் மறைக்காமல்
என்ன வேண்டும் என்பதை என்னிடம்
காட்டி இருந்தால்
கண்ணீர் என்ற ஒன்றில்
உன் கண்கள் கலங்கி இருக்காது,

உரிமைகளில் உணர்வுகள்
வந்திருந்தால்
உள்ளம் உற்சாகம் அடைந்திருக்கும்!
அனால்
உரிமைகளில் புதிய உறவு
தோன்றியதைக் கண்டு
புரியாமல் தவித்தேன்!,

இருமனதாக உன் மனம் தவிக்க
அதை ஏற்க முடியாமல்
என் மனம் இருக்க
எதையே காரணம் காட்டி
ஏனோ நீ பிரிந்தாய்!,

பிரிவுகள் என்பது என்றும்
எனக்கு புதிதல்ல! ஆனால்
அதனை புரியாமல் நீ
சென்றதைத்தான் புதிதாகக் கண்டேன்!!,

தேய்வதும் வளர்வதும்
தெருவில் இருக்கும்
நிலவுக்கு வழக்கமாக இருக்கலாம்!
தேடுவதையும் வாடுவதையும்
தேகம் வழக்கமாகக் கொண்டிருந்தால்
வாழ்க்கை என்னவாகும்?,

விழிப்போகும் இடமெல்லாம்
வழியாக இருக்கலாம்! ஆனால்
வழிப்போகும் இடமெல்லாம்
வாழ்க்கைத்துணையாகுமா?!
இருக்கும் என்று நம்பினால்
அதனை ஏற்க
என் இதயம் தயாராக இல்லை!,

இருமனதாக நீ
இருக்கும் வரை
ஒருப்போதும் உன்னை
என்மனம் ஏற்காது! எனவே
வீணாக விரும்பி தவிப்பதை விட
வெறுக்க கற்றுக்கொள் என்னை…!


– செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

கடந்தகால நினைவுகள்

fnprb_326144

கடந்தகால
நினைவுகளைச்
சுமந்துகொண்டு
கடந்து
போகிற….. நிகழ்கால
தனிமை…..எப்போதும்
இனிப்பதில்லை…..
எவருக்கும்…..!!

தனிமை
சுகமென்று
கவிபடிக்க
களத்தில்
பலபேர்
உண்டு…..நிஜத்தில்
யாருமில்லையே……!!?

இந்த
தனிமைதான்
எனக்கு
கிடைத்த
ஆயுள்தண்டனையா…..?
என்றே
எண்ணத்தோன்றும்
என்னுடைய
தனிமை…..!!

வாழ்க்கை
ஒரு
போராட்டம்
தான்…..இங்கே
போராட்டத்தால்
வாழ்க்கையை
வீணாக்கி
நின்றேன்
விரக்தியில்…..!!

விதியில்
பழிபோடவும்
விருப்பமில்லை….
என்மேலும்
தவறுண்டு
என்றுணர்ந்து……!!

உந்தன்
அன்பின்
அரவணைப்புக்களை
தவறவிடும்
ஒவ்வொரு
நொடியும்
மரணப்படுக்கைதான்
எனக்கு……!!

என் விழிகளில்
வசிப்பவளே
எந்தன்
விழிநீரை
ஏனடி
விரயமாக்குகிறாய்?
காலமெல்லாம்
சுமப்பேன்…..
காதலை
என்று வாழ்ந்தேன்…..
கடைசிவரை
கவலைகளை
மட்டும்
சுமக்கிறேன்……!!

விழி
மூடினாலும்
விழி
திறந்தாலும்
வேதனை
சரிபாதிதான்…..என்
கண்ணே
என்னுள்ளே
என்றும்
நீதானடி…..!!

வானம்
திறந்துதான்
கிடக்கிறது……
வர்ணம்
பரந்துதான்
இருக்கிறது…..
எல்லோர்க்கும்……எனக்கு
மட்டும்
முன்னிருட்டு…..!!

உந்தன்
திசைகள்
அறியாமல்
எந்தன்
ஆசைகள்
அடியோடு
அழிந்தே
போகுது…..அன்னை
தந்த
ஆயுள் உன்னை
நினைத்து
போய்விடுமே……!!!

உறக்கம்
தொலைந்து
மூன்று
நான்கு
ஆண்டுகளாச்சு…..
மீண்டும்
மீண்டும்
தொலைவாய்
போனது
தூக்கம்……
தூரம்
நின்று
துயரமாய்
ஆகிப்போன
நம்
வாழ்க்கையால்……!!!!!!!!!

-thampu

————————————

நினைவில் கலங்குகிறேன்..

pagrs_300185

உன்னை நினைத்து
நினைத்துத்தான்
நித்தமும்
கலங்குகிறேன்…..
எதிரியே
தெரியாத
தேசத்தில்…..யுத்தம்
புரிகிறேன்…..!!

நான் மடிந்து
போனாலும்
உன்நினைவுகள்
முடிந்து
போகாது…..மீண்டும்
மீண்டும்
நினைவலைகளாய்
நெஞ்சில்
வாழும்……!!

மலரும்
பூக்கள்
எல்லாம்
மாலை ஆவதில்லை…..
உள்ளத்தில்
உதித்த
காதல்
எல்லாம்…..கரை
சேர்ந்ததில்லை……மாறாக
கவலைகளையே
தந்து
தொலைக்கிறது……!!

என் சிந்தனையில்
நிலைத்தவளே…..
என்னை
சிதையில் போட்டாலும்
சீக்கிரம்
உன்னைத்
தொலைக்க
மாட்டேன்……!!

நம்மை
மறந்து
நாம்
வாழ…..இந்த
ஜென்மத்தில்
எங்கேயும்
இடமில்லை…..
அப்படியும்
மறந்தால்
இந்த
ஜென்மத்திலேயே
நாம்
இல்லை…..!!

காதலின்
வலிகளோடு
ஒருசில
வரிகள்……
பேனா மை
கொண்டு அல்ல…..
என் கண்ணீரின்
ஈரம் கொண்டு……!!


thampu

அர்த்தம் இல்லாதவைகள்..

kqhcw_282484

நான் நானாகவும் இருக்கிறேன்
நான் நீயாகவும் இருக்கிறேன்
———————————————
நடக்கின்ற பூ வனம் நீ
நடமாடும் கல்லறை நான்
———————————————
“உன்னை பிடிக்கவில்லை”
என்று நீ சொன்ன சொற்கள்
வார்த்தை பிழைகள் தானே
———————————————-
இனி தவணை முறையில் மரணம்
எனக்கு
என் கைபேசியில் உன் புகைப்படம்
பதிவிறக்கம்
———————————————–
நீ பார்த்த நொடிகளுக்கா,
நீ பார்க்க இமைத்த இமைகளுக்கா,
எதற்கு தர தண்டனை
எதற்கு தர பரிசு
———————————————-
வாட்சப் திரைக்குள் எப்போது வந்து சேருவாய்
நெருங்குகிறேன் நொடிக்கு நூறு முறை நீ எப்படி….
———————————————–
உன் நினைவுகளை தூக்கிப் போட்டும் பின்பு,
பிடித்தும் விளையாடுகிறேன்
இடைப்பட்ட வெளியில்
(வலிப்பட்டு) இன்னும் மிச்சமுள்ளது என் காதல்
——————————————————
நேசத்தின் விளிம்புக்கு
அப்பால் பள்ளம் அல்ல
குழி தோண்டு
இனி நான் வாழ்வது உறுதி இல்லை.
—————————————————–
கனத்து போனது மனம்
காரணம் நீ தான்
கவித்துவமாகி போனது மனம்
இதற்கும் காரணம் நீ தான் ……
——————————————————-
நீ இல்லா நாட்கள் இனி எப்படி
இப்படி நான் நினைத்துக்கொண்டிருப்பதே
என் கல்லறையில் தானோ……….
———————————————–

ஆனந்தி

 

 

சொல்ல மறந்த சொற்கள்…

hreyj_279361.jpg

கண்களால் கைது செய்து
காதலை புகுத்தி விட்டாய்.
பார்வையால் தவிக்கவிட்டே
என்னை தனிமையில்
ஆழ்த்திவிட்டாய்.
தோழியாய் துணைநின்றே
என் தோல்விகளை
குறைத்துவிட்டாய்.
காதலை மறைத்து நீயும்
கள்ளியாய் தள்ளி நின்றாய்.
காலமும் கொடுமை செய்தே
நம் காதலை
குதறித் தின்ன…
சொல்ல வந்த சொற்களெல்லாம்
உயிரிழந்து உனைத் தேட…
உன் உறைவிடம் தெரியாமல்
என்னுள்ளத்தில் உறைந்துபோக…
உன் நினைவுகளைப் பிரித்தெடுத்து
கனவுகளில் திரையிட்டு…
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க…
இந்த நொடி சொலகின்றேன்
என் காதலி நீயென்று.

இந்த செய்தி சேருமுன்னே
என்னுயிர் பிரிந்தாலும்
கல்லறையில் எழுதிவிடு…
உன் காதலன் நான் என்று…!

———————————————————

சக்திவேல் லோகநாதன்

ஆழ்ந்த உறக்கம்…

svbtl_278940

இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா… என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??

இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை

இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!

அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!
என்னை கொஞ்சம் பாரேன்

திரும்பி பார்த்தேன்
உறைந்து போனேன்..!!
என்னை போல ஒர்
உருவம் அமைதியாய்
உறங்கி கொண்டிருந்தது..!!
நான் இறந்து விட்டேனா??

அந்த ஆழ்ந்த உறக்கம்
களையாததது என்
உடலுக்கு..!!
இனி இந்த களைந்த
உறக்கம்
முடியாததது
என் உயிருக்கு..!!

————————————————————

இவள் நிலா

பிழையாய் போன காட்சிகள்

 

ygpzx_277268

 

இருண்டு போகும் என தெரியாமல்
இத்தனை நாளும்
ஆசை வைத்து..
பிரிந்து போகத்தானா
உயிர் பிழைத்து வந்தேன்…..?

நம் இருவருக்குமுள்ள பந்தம்
அது அறுந்தே போனது…
உன்னோடு எல்லாம்
முடிந்தே போனது….
கணவுகளும் கருகிப் போனது….

இனி என்று என் வாழ்க்கை
வந்து சேருமோ……?
பனித்துளி போலவே
மாறி மாறி வந்து செல்லுமோ….?
மாயமாய் மறந்தேதான் போகுமோ…..?

மனச்சாட்சி இல்லாமல்
சாட்சியாய் நின்றாள்……
அவளுக்கு புரியவில்லையா…..?
நான் சுமக்கப் போகும்
வலிகளின் வலிகள்…….

ஆறாத காயங்கள் ….
தாழாத வேதனைகள்….
தந்து போனாள். .
தங்கிக் கிடக்கிறது உன் நினைவுகள்
மட்டும் எனக்குள்ளே….

நேற்றிருந்தோம் ஒன்றாய்….
இன்று எங்கோ சென்றாய்…..
என்னுள் ஒழிந்து கொண்டே..
எதிரில் மறைந்தே போனாய்….

நினைவோடு உரையாடும்
உள்ளம் தந்தாய்…..
உயிரில்லாமல் உலாவும்
உணர்வைத் தந்தாய்….
நின்ற இடம் தெரியாமல்
நீ போனாய்…….

பெண்மைக்கு பொருள் தந்தாய்..,
தாய்மை உணர வைத்தாய்….
தவிக்கிறேன் உன்னைக் காண
பாவியாக பதறுகிறேன்…
உன்னைச் சேர முடியாமல்….

தாய்.,தந்தை போலவே
தாங்கிக் கொண்ட நீ இன்று
வாழ்க்கையை விட்டே
நீங்கிப் போகிறாய்……
எப்படி இனி உன்னை
சொல்ப்படி சந்திப்பேன்
விதிப்படி சேர்வோம் என்றாயே…
இதைத்தானா….?

கண்ட கனவெல்லாம்
உன்னிடம் சொல்ல….
கை பிடித்து தலை தடவி
நனவாகும் என்று சத்தியம் செய்தாய்..,
இன்று காணாத கனவொன்றே
நனவானதே……

தன்னாலே பேசிக் கொள்கிறேன்
உன்னோடு என்றே…,
தேற்றிக் கொள்கிறேன்…
தேற்றிக் கொள்கிறேன்…..
இனி நீ இல்லை என்றே….
தேற்றிக் கொள்கிறேன்…….

என் தேகம் அது
உன் விரல் பட்ட நியாபகத்தில்
அழுது தீர்க்கிறது…..
உன்னை தேட முடிந்தும்
முடியாமல் அடங்கிக் கிடக்கிகும்
கால்கள்
என் கண்ணீருக்கு காரணம் தான்
என்றே கதறுகிறது…..

இரவு பகல் எனனை நாடிய
இதயம் ஒன்று இரும்பாய்
மாறி என் இதயத்தை உடைக்குமென
இது வரை தோனவில்லை….
இன்றும் தோன்றுகிறது
இரும்பல்ல அந்த இதயம்
அது ஒரு காலத்தில்
நானும் வாழ்ந்த இடம்…..

———————————————————–

M.F.Askiya

நீயெங்கே.??

tcgse_276461

எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!…
இதயம் கிழிந்திட…
உணர்வுகள் சிதைந்திட…
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!….
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!…
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!…
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்…!
இரவும் பகலும்
என்னை மட்டும்
விட்டுவிட்டு ஓடியபடி
கைகொட்டி சிரிக்கிறது…
நீக்கமற நிறைந்திருக்கும்
தனிமையினூடே
கரைந்து மறைகிறது
என்
கொஞ்சலும்…
கெஞ்சலும்…!
பேசாமல் நான்
அதையே
காதலித்து
தொலைத்திருக்கலாம்…!
கனநொடி தோன்றி
மறையும்
வானவில்லாய்
வந்துப் போனவளே…!
பழுதுப்பட்ட
வாகனத்தை நம்பி
பாரசீகம் போக விரும்பிய
மூடனது கதையானது
உன்னுடனான
என் நாட்கள்…!
நிலவையும் ரசிக்க
மறுக்கிறது
உன் வதனம் கண்ட
விழிகள்!
தொடர்புள்ளியென
கரங்கோர்த்து
தொடர்ந்துவர
ஏங்கியவனின்
எதிர்காலத்தையே
வினாக்குறியாக்கி
விடைப் பெற்றாயடி
பாவி…!
காதலெனும்
போர்வைதனில்
நீ தந்த
வலிகளையெல்லாம்
வரிகளாக்கிவிட்டேன்…!
கரும்பின் சாறென
காதல்
பிசைந்து தந்த
என் கவிதைகளை
நீ
என்ன செய்தாய்?!…

————————————————————–

Daniel Naveenraj