வறுமைக்கோடு

தலையை தூக்கிப்பார் ,
விமானச் சத்தம் காதை கிழித்தது..!
சற்றே குனிந்துப்பார் ,
வீதியெங்கும் வீடாய் போனது…..!

தடகடவென ஓடும் …
ரயில்களோ துக்கத்தை தூரமிட்டது …!
அலாரம் எதுவும் எமக்கில்லை,
தினம் சூரியன் தான் எம்மை எழுப்புது ……….!

தெரு நாய்களும் உறவினர்கள்தான்,
உணவினை நாங்கள் உண்ணும்போது …!
விடியவிடிய போரிட்டாலும் .,
வெல்வதேனவோ கொசுப்படைதான்..!

தினம் நாங்கள் குளிப்பதில்லை..
இறைவனே மழையை அனுப்பிவைபான்..!
பாசம் அவனுக்கு அதிகமானால்..,
வீதியிலே நீச்சல் குட்டையை கட்டிவைப்பான் …!
ஒரு ரூபாய்க்கு அரிசி………
விலாசம் உள்ளவருக்கு தானா…?
சத்துணவு ………….
குழந்தைகளுக்கு மட்டும் தானா…?
கேள்வி கேட்டுக்கேட்டு வாய்தான் வலிக்கிறது…!

இருந்தும் ….,
கலெக்டர் கனவுடன்
கால் பரீட்சை எழுத சென்றிருக்கிறான் ,
என் மகன்
‘காலராவோடு’!!

——————————————————–
–இரா.சீ.சுகுமாரன்

Advertisements

விவசாயி மகன்

உழவன் மகனே
உள்ளம் வருந்தாதே
ஊருக்கே சோறிடும் உன்தந்தை
உனக்கு மட்டும் தந்தையல்ல
உண்போர் அனைவருக்கும் தான்..

நீ
உழவன் மகன் என்பதாலா
உனை ஒருத்தி வெறுக்கின்றாள்?

அரசபணி செய்தும் கூட
மணக்க உன்னை மறுக்கின்றாள்
நாட்டின் தலைவர்களே
உழவன் மகன் என்பதை
உளம்மகிழ்ந்து கூறும்போது
வீட்டின் தலைவிக்கு
விவசாயி மகனென்ற
விலாசம் பிடிக்காததேன்…??

ஆகாயத்தில் இருந்துதான்
வந்தவளா அந்தவளும்
ஆகாரம் உண்ணாமல்
வாழலாமா எந்தவளும்
விவசாயி பெற்றவனை
விரும்பவில்லை போகட்டும்…

அவன்
விளைவிக்கும் ஆகாரம்
விரும்பி உண்பதேன்?
என்ன நியாயம் ??
இது என்னஅநியாயம் ???

விந்தை உலகில் இன்று…
விவசாயம் சிலருக்கு
விபச்சாரம் போலாச்சு
அபச்சாரம் அபச்சாரம்
அவளுடன் நீ வாழுவது
எறும்புக்கும்கூட
இன்னாது செய்யா உந்தன்
இதயத்தை உடைத்து விட்டாளே
துரும்புக்கும் இடமின்றி
மணப் பேச்சை
துப்புரவாய்த் துடைத்து விட்டாளே…

தர்சனே நீ
உழவன் மகன் என்பதை
உரத்துச் சொல்லு !!
புரிந்த ஒருத்தி
பூமாலையுடன் வருவாள்.

குறுகிய மனத்தாளோடு
குடித்தனம் சரி வராது
உன்
உருகிய மனதுக்கு
ஒத்தடம் அது தராது.

கேவலம்
அப்பாவின் தொழிலை வைத்து
அன்பை அளந்து பார்க்கிறாளே
நீ தப்பித்தாய் மகனே
தலை முழுகு இன்றே போய்
தந்தையின் தொழிலை
தராதரமாய்க் கொள்வோளை
தாரமாய் நீ ஏற்றால்
பாரமாய்த்தான் போகும் வாழ்க்கை…

நல்ல வேளை
பேச்சுடன் மட்டும்அது
பெயர்ந்து போய் விட்டது
இல்லையேல்
மூச்சுள்ள வரை நீயும்
முணு முணுப்புக் கேட்க வேண்டும்!!

விவாகம் என்றால் நிறம்தீட்டும்
விளையாட்டில் ஒரு வகையா
விவசாயத்தால் அதன்
சாயம் மாறிப் போவதற்கு
உக்கிரமாய் யோசிக்காதே
வக்கிர மனம் கொண்டோள்
வாழ்ந்து விட்டுப் போகட்டும்
உனக்கென்று ஒருத்தி
உலகில் பிறந்திருப்பாள்
அதை எண்ணி நீயும்
ஆறுதல் கொள் மகனே……


ஏ.ஆர். பைசல்

சில துரோகம் பல துரோகிகள்

நஞ்சை புஞ்சை எல்லாம்
நரகமென ஆட்சியில்
உள்ளவரெல்லாம்
மிருகமென

அணை போட்டு தடுக்கும்
அநியாயத்தை கேட்க
யாருமில்லை

வக்கற்றவர்களுக்கெல்லாம்
வாக்களித்து
நடு தெருவில் நாம்

ஆயிரம் தீர்ப்பு எழுதியும்
தண்ணீர் பெற்று தர
துப்பற்ற சட்ட மேதைகளே
இங்கே சாப கேடு

ஆறு வற்றுவதும்
அதிர்ஷடம் என
இருக்கும் மணலையும்
விற்று பிழைக்கும் நாய்கள்

விவசாயியின் மரணத்தையும்
மறைத்து நிவாரணத்தை
மிச்ச படுத்தும்
அரசு

இலவசத்திற்கு ஆசைபட்டு
தவணை முறையில்
தண்டனை பெறும்
நாம்

சில தாலிகள் அறுந்தாலும்
பரவாயில்லை
தாலிக்கு தங்கத்திற்காய்
சாரயம் விற்று
சம்பாதிக்கும் அரசு

எப்போ வேண்டுமானாலும்
கவிழும் ஆட்சி

அதுவரை தாங்கி பிடிக்கும்
கூவத்தூரார்கள்

வருமான வரி சோதனை
ஒன்று போதும்
மந்திரிகளின் வாயை அடைக்க

மத்திய அரசே
கவலை கொள்ளாதே

தன்னை காத்துகொள்ளவே
எம்மை விற்கவும்
தயங்காத ஆட்சியாளர்கள்
உன் பின்னே

நாங்கள் அழுதாலும்
இறந்தாலும்
துடி துடித்தாலும்
சிரித்து கொண்டே
வேடிக்கை பார்ப்பார்கள்
உன்னை போலவே

காவிரியை தடுத்தால்
தறிசாக மட்டுமே மாறும்
மீத்தேனையும் எடுத்துவிடு
மொத்தமும் பாலைவனமாகும்
மாடுகளை கொன்றுவிட்டு
ஒட்டகம் மேய்க்க பழகி கொள்கிறோம்

அப்பொழுதாவது
தீருமா உன் பசி

இங்கே உன்னை
எதிரக்க கூட
இல்லை இல்லை
எங்களுக்காய்
பேச கூட நாதியில்லை

வாக்கை விற்று
வாழ்க்கையை தொலைத்தவர்கள்
நாங்கள்

இதுதான் விதி

ஒரு தியானத்திற்கும்
ஒரு சபதத்திற்கும்
ஒரு சட்டை கிழிப்பிற்கும்
சில கூவத்தூரார்களுக்கும்
மத்தியில்

உயிருள்ள ஜடமாய்
நாங்கள்

————————————————–

ந.சத்யா

கடந்து வந்த பாதையில்..

cqtes_191615

கடந்து வந்த பாதையில்..
நடந்து வந்த கால்தடம்..
தேடியலைய கிடைத்தது!

பள்ளிபருவத்தில்…!

நான் அதிகமாய் அமர்ந்த..
அந்த வழியில்..
கடையின் படிக்கட்டுக்கள்..!

அவ்வழியாய் கடந்த..
தேவதைகளின் வாசம்…
நினைத்து பார்க்கும் போது..வீசும்..!
நெஞ்சில் ஒரு சில நிமிட சாரலாய்…

அவளுக்கு வண்ண ஆடை மாற்றினால்..
இவளுக்கு உடம்பை குறைத்தால்..
ம்ம்ம்.. இவள் கண்ணாடி இல்லாமல்..

இப்படியான எண்ணற்ற கற்பனையில் நண்பர்களோடு நானும்..
கண்களை மூடிய மெல்லிய சிரிப்பில்…
மீண்டும் ஒரு சாரலில்…!

அதில் நனைந்தே மூடிய கண்கள்..
வகுப்பு ஆசிரியரின் பலத்த குரலுக்கு.. விழித்தெழுந்து ஓடி ஒளியசெய்தது…!

அன்று பயத்தின் கண்ணீரில்!
இன்று ஆனந்த கண்ணீரில்…

மீண்டும் கிடைக்க..
வேண்டும் மனம்…!
ஒரு குழந்தையாய் அந்த பள்ளிபருவத்தை.. தினம் தினம்…

அழகான நினைவை ஊட்டுகிறது!
என் மனதின் பசியாற்றிட…
இன்றைய பொழுதும்…!

————————————————————

sathurthi

கடைசி ஆசை!

ujbvc_227024

ஆவிகள் இருக்கலாமென
சொல்லத் தோன்றும்
என் தனிமையின் நாட்களில்,
கடந்த காலம் என்னை
தனிமையின் பிரதிநிதியாக
அறிவித்து இருக்கலாம்..!!

எனக்காக யாரும் அழாத போது
நான் அழுதிருக்கலாம்,
நிமிடங்களின் முட்கள்
நேரத்துக்கு நேரம்
என்னை மெய்ப்பித்துக் கொள்ள
நிறம் மாறியிருக்கலாம்..!!

திட மௌனமாகி
நான் இருந்த வேளை,
அப்பாலிருந்து சில
தீய சக்திகள்
துக்கம் விசாரிப்பதாக
தூண்டிச் சென்ற போது
என் உயிரை அசைத்து
உணர்வுகளை சரி பார்த்திருக்கலாம்..,!

என் வெக்கம் மானம் சூடுகளை
அக்கம் பக்கம் யாரும்
கவனிக்காத போது,
மெலிந்த என் வலிமைகளை
ஒன்று சேர்த்து
தூண்டில் புழு போல்
கரை ஏறத் துடித்திருக்கலாம் ..!!

கடந்த காலம் என்னை
வழி மறித்திருந்தாலும்,
மணலில் கட்டிய வீட்டை
இடித்து இடித்து கட்டும்
சிறுமியின் உள்ளங்கை அளவு
நம்பிக்கை எனக்குள் இருந்திருக்கலாம்..!!

கடைசி ஆசை என்னவென
யாராவது கேட்டால்
நானும் சொல்வேன்,
சிகப்பில் எல்லாம் வேண்டும்,
நிஜமாய் சிரிக்க வேண்டும்,
தனிமையை விட வேண்டும்,
நிறைவாய் உணவு வேண்டும்,
பக்குவமாய் அழ வேண்டும் ,
முடிவெடுக்க தகுதி வேண்டும்
இன்னும் இன்னும் சொல்வேன்..

நான் என்ன செய்யட்டும்..??
நம்பிக் கொடுத்தும்
திரும்ப வராத
கடன் போல
கடைசி ஆசைகளை
இறந்த காலத்திடம் கடனளித்து
தினமும் நாட்காட்டியின்
காகிதம் கிழித்து
எதிர்காலம் காத்திருக்கிறேன்…!!

——————————————————-

மனோ ரெட்

 

இரவின் மடியில்..

A_Dark_Starry_Night_Wallpaper_by_s3vendays.jpg

பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க…
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!

இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!

சற்று தாமதமாக விடி என்று..!

இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!

விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!

மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!

நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!

நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!

நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!

இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!

என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,
இரவில் மடியில்..!

———————————————————

யாதும் நானறியேன்..

ohmgj_180365

வெட்ட வெட்ட
வளர்கிறது -அதனைத்
தூக்கியெறியும் நான் தளர்வதன்
பொருள் யாதோ
நகமறியேன் ;

எண் சாண் கூட்டுக்குள்
முடங்கிக் கொள்ளுமா உயிர் ,
விழிப்புணர்ச்சியில்
ஐம்பொறிகளின் பாவைக்கூத்து
முடமாகப் புத்தியறியேன் ;

ஊரெல்லாம் உலகெல்லாம்
ஓடிச்சென்று திரும்புகிறது
ஆசை வாய்த்த மனம் ,
அதன் வழித்தடங்கள் யாதோ
கனவறியேன்

மீண்டும் மீண்டும்
புரட்டுகிறது வாழ்க்கை
இன்னும் எத்தனை பக்கங்களோ ?!
விடைகிடைக்கா வினாவிற்குள்
மரணமறியேன் ;

இடையில் வலியது
ஊழ்வினைகளாம்
அக்கணக்கு வழக்குகளின்
நிலுவைகள் எவையோ
இன்னமும் விதியறியேன் ;

வளர்ப்பதெல்லாம்
உணவெனில்
உறவுகளின் பங்கு ஊட்டுவதே
இக்காரணங்களில்
பற்றுதலேது அன்பறியேன் ;

தோல்விகளும் வெற்றிகளும்
தண்டவாளத்தில் நடைபயின்றால்
எதனை ஊன்றி
இப்பிறவி கடப்பேன்
இன்னமும் பிறப்பறியேன் ;

பிழைத்திருத்தங்களுக்காய்
மீண்டும் நுழைகிறேன்
அனுபவ அறைக்குள் ,
நம்பிக்கை வெம்பிவிடில்
துணையாரோ யாருமறியேன் ;

வருவது நாட்கள்
தொடர்வது களைப்புகள்
பிழைப்பதெல்லாம் நிஜங்கள்
தூக்கங்கள் அண்டாத
இத்துணிவையும் நானறியேன்..!

——————————————————————————————————

புலமி

யாருக்கும் தெரியாமல்

White-Privilege-Conference-Claims-Those-Who-Help-Black-People-Are-Like-Racist-Alcoholics-665x385

வெள்ளைக்காரி மோகம்
இன்று நேற்றல்ல…
தத்தா காலத்து சமாசாரம்!

பேப்பெரில் பார்த்தே
உருகியவர்கள்…
தங்கள் கைலி கனவுகளில்
கல்யாணம் கூட
கட்டி இருந்தார்கள்!

குங்கும பொட்டும்,
கொசுவ மடிப்பும்,
வாழ்க்கைக்கு..
அரைகுறை கவுனும்
அங்க மினுப்பும்
கனவுக்கு….

தெளிவு தான்
நம் பாட்டன்களின் கனவு!!
நாமோ நனவிலும்
தெளிவின்றி…

பெண்களின்
எண்ணம் பார்க்காமல்
வண்ணம் பார்த்ததால்
கூடிப்போன விவாகரத்துகள்!
கூடாமல் போன கனவுகள்…

அழகு!
இந்த வார்த்தைக்குதான்
எத்தனை அர்த்தங்கள்?!
அத்தனையும் கொடுப்பதென்னவோ
அர்த்தமற்ற மனிதர்கள்…

வார்த்தைகளின்
உயிரைப் போக்கி
உடலைப் புணர்ந்தவர்கள்!

ஊட்டிவிடப்பட்ட விஷம்,
திணிக்கப்பட்ட திமிரு,
கலாசார வளர்ச்சி எனும்பெரில்
காட்டு மிராண்டித்தன ‘மீள்வு’!
இத்தனையும் மொத்தமாய்..
நம் ஒவ்வொரு முடிவில்…

யாருக்கும் தெரியாமல்…
தெரிந்தே தெரியாமல்…
தொடரும் அவலம்!

கறுப்பை பார்க்காமல்
கற்பை பார்த்து,
சிகப்பை பார்க்காமல்
செழிப்பைப் பார்த்து
காதலிங்க பா…

வாழ்க்கை சுகமாகும்!
வர்ணம் மட்டும் ஓவியமில்லை…
கறுப்புவெள்ளை தான்
என்றாலும்
ஓவியம் கசப்பதில்லை!

———————————————————————————————————-

அபி @ முஹம்மது நௌபல்

தேவை ஒரு காதல் கவிதை..!

cobhg_257958

உனது கிராமமும்..
எனது கிராமமும்..
துரத்த..
சென்னை வண்டி ஏறியது..
நம் காதல்.

கோவிலில்
வைத்துத்தாலிகட்டி..
வாடகை வீட்டில் குடியேறியபோது..
அந்த வீட்டில்
உன்னையும், என்னையும் தவிர..
வேறு பாத்திரங்கள் கிடையாது.!

நாம் ஓடிவந்த செய்தியில்..
ஊர் பற்றிக்கொள்ள..
உதயம் தியேட்டர் வாசலில்..
நின்றுகொண்டிருந்தோம்..
ஜில்லுனு ஒரு காதலுக்காக..!

தோட்டத்தில் ஊஞ்சல்கட்டி..
ஆடித்திரிந்த உனக்கு..
கதவே திறக்காத
சென்னைவாசிகள்..
அந்நியமானார்கள்..!

மாடியில் நின்று..
நான் மறையும்வரை..
பார்த்துவிட்டு..
தனிமைக்குள் நீ..
புதையத்துவங்குவாய்..!

அலுவலகம் நுழையும் போதே..
நான்கு சுவர்களுக்குள்..
இருக்கும் உன்னை நினைவூட்டிவிடும்..
முகப்பிலே இருக்கும் மீன்தொட்டி.!

பீச்சும் பார்க்கும் நமை..
ஏந்தி நிற்க..
ஞாயிறு தோறும்..
உன் சுடிதார் பூக்களுக்கு..
அருகிலே நான்..!

இப்படியாக கரையேறிய..
நாட்களின் ஊடே..
கருவுற்றாய் நீ.!

தேர் கொடுக்காவிடிலும்..
தேகம் கொடுத்தேன்..
கொடி நீ படர..

மார்பில் முகம் புதைத்து..
தூங்கிவிடும் உனக்கும், எனக்கும்
இடையே வயிறு இடித்தது.!

வேறுபட்ட..
இரு வர்ணங்கள் இணைந்து..
புது நிறம் தோன்றியது.!
அது இரு ஜாதியை..அழித்திருந்தது.!

——————————————————————————-

நிலாகண்ணன்

இவர்களுக்காய் அவர்கள்..

independence-day-special-top-15-patriotic-movies-of-bollywood-mother-india

அதிகளவு எதிர்பார்ப்புக்கும்
சிறிதளவு முயற்சிக்கும்
இடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
இவர்கள் காலம்.
சமையல் அறையில்
இடையுறாது
ஒலிக்கும்
தொலைபேசிச்
சிணுங்கல்களை
காஞ்சி புரங்கள்
கைவளையல்கள்
கைக்கடிகாரங்கள்
சின்னத்திரைத்
தொடர்கள்
பாகுபலிகள்
முகப் பூச்சுக்கள்
நகச்சாயங்கள்
நிறைத்துக் கொள்வதால்
அடுப்பில்
அரைகுறையாக
கொதித்துக்
கொண்டிருக்கும்
குழம்புகள்
உவர்ப்பா புளிப்பா
எனத் தெரியாது
உருக்குலைந்து
போகின்றன..
எல்லாம் ஓய்ந்த
அந்த நாளின் முடிவில்
இருளின்
முதுகுத் தண்டு கிழித்து
இறுதியாக
வரும் பேரூந்தில்
இரண்டாவது ஷிப்ட்
முடித்து
இறங்கி வந்து கதவு தட்டும்
இவர்கள் கணவர்கள்
கைப்பையில்
ஏதோ கனவுகளுடன்
காத்திருக்கும் வங்கி அட்டை
இறுதி மூச்சு விட தயாராகிறது
நாளை இவர்களுக்காக ….

-உமை