தொலைந்த சிறு வயது

நண்பா…….
எப்படி இழந்தோம்
என்பது தெரியாமலேயே
தொலைந்து போய்விட்டன
அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து
உப்புநீரில் குளித்தால்
மேனி கருக்குமென்ற
அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி
வியாபாரி தோட்டத்து
நன்னீர் கிணறு அதிர
குதித்தாடிய ஈர நாட்கள்…

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய
உறுமீனுக்காய்த் துள்ளி
விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்
பீற்றிக்கொண்ட நாட்கள்…

கவட்டைக் கொம்பொடிய
நுங்கு மட்டை வண்டியுருட்டி
சக நண்பர்களுடன்
தோற்றும் ஜெயித்தும்
விளையாடிய நாட்கள்…

மொட்டுவிட்ட
தட்டாஞ்செடிகளில்
பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை
காத்துக் கிடந்து
நாவூறப் பறித்து
ருசித்த நாட்கள்…

நினைத்தாலே நினைவுகளில்
ஈரம் சுரக்கும்
பிள்ளைப் பிராய நாட்களை
தொலைத்துவிட்டு..

கைகளை விரித்தபடி
ஓடிவரும் குழந்தைகளை
வெறுமை பூசிய நாட்களால்
வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்
இப்போது!

______________________________________________________________________

முத்துக்குமார்

Advertisements

உழவனை உயர்த்துவோம்

urqsp_342976

எங்கள்
பசியின்வலியை உணர்ந்து;
உங்கள்
வாழ்க்கை வழியை மறந்து;
சேற்றில் கால்வைத்தீர்களே…….
உழவர்களே…..
நீரே எம் தோழர்கள்!!!!

பதவியைத் துறந்து;
பணத்தினை மறந்து;
மனிதநேயத்துடன் வாழும்,
உன்னத உழவர்களே…..
நீரே எம் இறைவன்!!!!!

“தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்“
என்றான் மகாகவி பாரதி.
ஆனால்
“உலகிற்கே உணவளிக்கும்
உம்மைப் போல
உவமை ஒன்றுமில்லை ஐயா!!!”

நீவீர் படும்துன்பமும் அறிவேன்..
அத்துன்பத்திலும் ,
மனம் கல்லாய் போன மனிதனுக்காக
உழைக்கும் ,உம்
உயரிய எண்ணமும் அறிவேன்

மக்களுக்கு ஓர் வேண்டுகோள்….

உழவனைப் போற்றி;
அவன் துன்பம் உணர்ந்து
உதவிடுங்கள்…
அவன்
நல்லெண்ணம் உணர்ந்து…
வணங்கிடுங்கள்!!!!

_____________________________________________________________________

பானுமதி

இரவும் வானமும் போல

kjgna_343314

வாழ்க்கை
எதற்குமே நமக்கு
சமயங்களைக் கொடுக்கவில்லை
நம் சந்திப்பின்
இடைவெளிகளே தீர்மானிக்கும்
உனக்கு என்னால்
அந்த கிடைத்த நேரத்தில்
என்ன கொடுக்க இயலும் என்பதை

என்றாவது ஒருநாள்
ஒரு சாலையில் வைத்து உன்னை சந்திக்கநேரிடும்
அச்சமயம்
நமக்கு நம்மிடமென்று
சொல்லி அழவோ
பகிர்ந்துகொள்ளவோ நிறைய இருக்கலாம்
அதற்கான
அதிகபட்ச சமயங்கள்
அங்கு இல்லாமல் போகும்
கிடைக்கின்ற நிமிடங்களில்
எப்போதுமான, அழகிய புன்னகை மாறாமல்
ஹாய், ஆர் யூ ஆல்ரைட்
என்றுவிட்டு
அந்த இடம் விட்டு நகர்ந்துவிடுவேன்
புரிந்துகொள்,
அந்த சூழலுக்காக, மன்னித்துக்கொள்

அதிக பட்சம்
ஒரு காஃபி ஷாப்பில்
இருவர் மட்டுமே இருக்கும் மேசையில்
எதிரெதிரே அமர்ந்து
நானும் நீயும் காஃபி பருகும் வாய்ப்பு உருவாகலாம்
அப்போதும் கூட
நமக்கு
பகிர்ந்துகொள்ளவோ
சொல்லிக்கொள்ளவோ நிறைய இருக்கும்
அதை விட்டுவிடலாம்,
பதிலாக
உன் சமயங்களில்,
ஒரு பத்து நிமிடங்களைக்கொடு
உன் வாழ்நாளில்
நீ மறக்க முடியாதது மாதிரி
அதை அழகாக்கி
திரும்ப உன் கைகளுக்கே
கொடுத்துவிடுகிறேன்
பெயர்த்தெரியாத ஒரு புதுப்பூவின் வாசனையை
உன்னைச்சுற்றியெங்கும்
தூவிவிட்டு
அங்கிருந்து காணாமல் மறைந்துவிடுகிறேன்

நீ இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
அந்த சாலையின் முதல் வளைவில் சென்று
ஒரு தொலைவில்
கரும்புள்ளியாகி மறையும்வரை
அந்த வாசனை,
உன்னிடமிருந்து இடம்பெயராமல் இருக்கட்டும்
அந்த நேரமின்மையை
புரிந்துகொள்

ஒருநாள்
உன்னிடம் நானும் என்னிடம் நீயுமென
முழுதாக
புதைந்துகிடக்கும் முழுநீள இரவொன்று கிடைக்கும்,
தொடுக்காத
மலர்க்கூட்டங்களுக்கிடையில்
தோள்பட்டையும் மார்பும்
தருகிறேன்,
உன் முகம் திறக்கும்
அந்த இருளிற்கு
அன்று விடுப்புக்கொடுத்துவிடலாம்
பேசிக்கொண்டே இரு,
இந்த உணர்வுகள்
என்னிடம் மட்டுமே
கிடைப்பதாக
அன்றெல்லாம் சொல்லிக்கொண்டே இரு…

_______________________________________________________________________

அனுசரன்

நீயே சொல்வாயே

xoegp_343107

ஓரமாய் நின்று உன்னைப்
பார்த்துவிட்டு போகும்போது
சாதித்ததாய் உள்ளம் மகிழும்..
ஆம் எனக்கிது சாதனைதான்!

உன்னைக் காணாத நாட்களும்
உண்டல்லவா?

மழை தூறும் நேரம்
மண்ணிண் வாசம் வீசும்..
என்னை நீ காணும் நேரம்
வாசமுள்ள காதல் பூ மலரும்..
உன் அலங்காரங்கள் என்னை
ஈர்க்கத்தானே!

வான் நிலவே
என்னில் பூத்த தாமரையே..
மனம் முழுதும் படர்ந்தாயே..
கனவல்ல என் காதலியே உன்

கரம் பிடிக்காத இதயத்தையே
கேளாயோ?ஒரு சொல்
கூறாயோ?வாராயோ என்
அன்பை பெற வாராயோ?
துரத்தி பிடிக்க நீ தொலைவில்
இல்லை
இழுத்து அணைக்க நீ அருகில்
இல்லை
தொட முடியும் ஆனாலும்
தொட முடியாது
இதென்ன விந்தையோ?
இல்லையென் சிந்தையோ?
நீயே சொல்வாயே……

_____________________________________________________________

பெ.பரிதி காமராஜ்