அவளுக்காக ஒரு மடல்

pztyf_310663.jpg

வணக்கம்!
என்னைச் சாய்க்கும், சாய்த்துக்கொண்டிருக்கும்
சாய்க்கப் போகும் இமைகளைக் கொண்டவளுக்கு.
நான் உங்களிடம் பேசுவதாக எழுதும்
இந்த எழுத்துக்கள் உங்களைச் சேரப்போவதில்லை.
ஏதோ ஒரு நம்பிக்கையில் இதை உணர்வீர்கள்
என்று எழுதுகின்றேன் கேளுங்கள்.

உங்கள் அழகென்று எடுத்துக்கொண்டால் அதன்
அருகினில் நிற்கக் கூட தகுதியற்றவன் நான்.
உங்களின் செல்வத்தைக் கணக்கில் கொண்டால் உங்கள்
நிழலைக்கூட நெருங்கத் தகுதியற்றவன் நான்.

இப்படி எவ்வளவோ முரண்பாடுகள் இருவருக்கும்
இருந்தும் உங்களின் விழிகளை நாடும் எனது
விழிகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நானும்
சேர்ந்து காத்திருக்கத் தொடங்கிவிட்டேன் நீங்கள்
வரும் வழி பார்த்தது.

உங்கள் பார்வைகளுக்காக இருபத்தெட்டு வயதிலும்
ஒரு பத்து வயது குறைந்த இள வயது இளைஞன்
போல தேடித்தேடி காத்திருக்கத் துவங்கிவிட்டேன்.
எனக்கே ஒருசில நேரங்களில் இது முட்டாள்த்தனமாய்த்
தோன்றும் ஒன்றென்றாலும் அதில் இருக்கும் இன்பத்தை
இழக்க மனமில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

எந்தன் வருத்தும் பார்வைகளுக்காக உங்களிடம்
பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டேன்.
நீங்களும் புன்னகைத்துக் கொண்டே ஏற்றுக்கொண்டீர்.
அதற்குமேல் பேச மனமில்லாமல் பதட்டத்துடன்
திரும்பி வந்து வருத்தப்பட்டுக் கொண்டேன்
இருந்த இன்பத்தை இழந்துவிட்டவனாய்.

உங்களை பார்க்கத் தவிர்ப்பது மாதிரி நடிக்கத்
தெரிந்த எனக்கு நினைக்காமல் இருப்பதுபோல்
உண்மையிலும் நடிக்கத் தெரியவில்லை. – நீங்கள்
வரும் வழிகளில் ஏதோ ஒரு மறைவில்
உங்களை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பேன்
இதையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எனக்கும் நன்றாகவே தெரியும் இதுவும்
இழக்கப்போகும் ஓர் இனம்புரியா இன்பமென்று.
இந்த இன்பத்தை நீங்கள் உணரப்போவதும் இல்லை!
உங்களால் உணரவும் முடியாது.- ஏனென்றால்
இது எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று.

நீங்கள் படைக்கப்பட்டது எனக்காக என்று
என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது.
ஒருவேளை எனக்காக என்று இருந்தால்
என் மகிழ்ச்சியை யாராலும் அளவிட முடியாது.
காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீங்கள் கிடைக்காமல் போனால்
எனக்காக வருபவளை உங்களை எப்படி
வைத்திருப்பேனோ அதைவிடவும் ஒருபடி மேலேயே
வைப்பேன் என்பதை உறுதியகச் சொல்ல இயலும். – அது
நீங்களாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறன்.

ஏமாற்றம் என்பது எந்தவகையிலும் எனக்குப் புதியதல்ல.
என்று ஏமாறப்போகின்றேன் என்ற நாளை நோக்கிக்
காத்திருக்கும் நான்.


சிவராமகிருட்டிணன்

Advertisements