யாதும் நானறியேன்..

ohmgj_180365

வெட்ட வெட்ட
வளர்கிறது -அதனைத்
தூக்கியெறியும் நான் தளர்வதன்
பொருள் யாதோ
நகமறியேன் ;

எண் சாண் கூட்டுக்குள்
முடங்கிக் கொள்ளுமா உயிர் ,
விழிப்புணர்ச்சியில்
ஐம்பொறிகளின் பாவைக்கூத்து
முடமாகப் புத்தியறியேன் ;

ஊரெல்லாம் உலகெல்லாம்
ஓடிச்சென்று திரும்புகிறது
ஆசை வாய்த்த மனம் ,
அதன் வழித்தடங்கள் யாதோ
கனவறியேன்

மீண்டும் மீண்டும்
புரட்டுகிறது வாழ்க்கை
இன்னும் எத்தனை பக்கங்களோ ?!
விடைகிடைக்கா வினாவிற்குள்
மரணமறியேன் ;

இடையில் வலியது
ஊழ்வினைகளாம்
அக்கணக்கு வழக்குகளின்
நிலுவைகள் எவையோ
இன்னமும் விதியறியேன் ;

வளர்ப்பதெல்லாம்
உணவெனில்
உறவுகளின் பங்கு ஊட்டுவதே
இக்காரணங்களில்
பற்றுதலேது அன்பறியேன் ;

தோல்விகளும் வெற்றிகளும்
தண்டவாளத்தில் நடைபயின்றால்
எதனை ஊன்றி
இப்பிறவி கடப்பேன்
இன்னமும் பிறப்பறியேன் ;

பிழைத்திருத்தங்களுக்காய்
மீண்டும் நுழைகிறேன்
அனுபவ அறைக்குள் ,
நம்பிக்கை வெம்பிவிடில்
துணையாரோ யாருமறியேன் ;

வருவது நாட்கள்
தொடர்வது களைப்புகள்
பிழைப்பதெல்லாம் நிஜங்கள்
தூக்கங்கள் அண்டாத
இத்துணிவையும் நானறியேன்..!

——————————————————————————————————

புலமி

Advertisements

யாருக்கும் தெரியாமல்

White-Privilege-Conference-Claims-Those-Who-Help-Black-People-Are-Like-Racist-Alcoholics-665x385

வெள்ளைக்காரி மோகம்
இன்று நேற்றல்ல…
தத்தா காலத்து சமாசாரம்!

பேப்பெரில் பார்த்தே
உருகியவர்கள்…
தங்கள் கைலி கனவுகளில்
கல்யாணம் கூட
கட்டி இருந்தார்கள்!

குங்கும பொட்டும்,
கொசுவ மடிப்பும்,
வாழ்க்கைக்கு..
அரைகுறை கவுனும்
அங்க மினுப்பும்
கனவுக்கு….

தெளிவு தான்
நம் பாட்டன்களின் கனவு!!
நாமோ நனவிலும்
தெளிவின்றி…

பெண்களின்
எண்ணம் பார்க்காமல்
வண்ணம் பார்த்ததால்
கூடிப்போன விவாகரத்துகள்!
கூடாமல் போன கனவுகள்…

அழகு!
இந்த வார்த்தைக்குதான்
எத்தனை அர்த்தங்கள்?!
அத்தனையும் கொடுப்பதென்னவோ
அர்த்தமற்ற மனிதர்கள்…

வார்த்தைகளின்
உயிரைப் போக்கி
உடலைப் புணர்ந்தவர்கள்!

ஊட்டிவிடப்பட்ட விஷம்,
திணிக்கப்பட்ட திமிரு,
கலாசார வளர்ச்சி எனும்பெரில்
காட்டு மிராண்டித்தன ‘மீள்வு’!
இத்தனையும் மொத்தமாய்..
நம் ஒவ்வொரு முடிவில்…

யாருக்கும் தெரியாமல்…
தெரிந்தே தெரியாமல்…
தொடரும் அவலம்!

கறுப்பை பார்க்காமல்
கற்பை பார்த்து,
சிகப்பை பார்க்காமல்
செழிப்பைப் பார்த்து
காதலிங்க பா…

வாழ்க்கை சுகமாகும்!
வர்ணம் மட்டும் ஓவியமில்லை…
கறுப்புவெள்ளை தான்
என்றாலும்
ஓவியம் கசப்பதில்லை!

———————————————————————————————————-

அபி @ முஹம்மது நௌபல்

என் நண்பன்…

My-Friend-tamar20-28344922-795-595

தெருவெல்லாம் தேவதைகள் நிறைந்திருக்க
அதைப் பாடக் கவிஞர் பலர் பிறந்திருக்க
அதனாலே நம் நட்பு மறைந்திருக்க
வருகிறேன் தமிழோடு அதன் பெருமை நிலைநிறுத்த!!

உனைப் போல் நண்பனைத் தேடி
எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி
உயிராய் இருக்கும் நண்பனே ,
நீயோ எனக்குள் ஒருவன்
உனை நான் பெற்றதால்
நானோ ஆயிரத்திலொருவன் !!

ஊரெல்லாம் திரிந்தோம்
ஓய்வின்றி அலைந்தோம்
அளவின்றிச் சிரித்தோம்
அழகுத் தேவதைகளை ரசித்தோம்!!

தொலைவால் தொலையாது நம் நட்பு
என அறிந்தும் ,
உண்மைகள் புரிந்தும்
நீ பிரிவதை நினைந்திடும் பொழுது
கண்களின் ஓரம்
வழிந்திடும் துளிகளால் ஈரம் !!!

நடித்திடும் உலகில்
துடித்திடும் உறவாய் வந்தவனே ,
சிரித்திடும் பொழுதும்,
கலங்கிய பொழுதும்
துணையாய் என்னுடன் நின்றவனே !!

தென்றல் தொட்டுச் சென்றால் இனிமை
நட்பு விட்டுச் சென்றால் தனிமை
இனிமையைக் கண்டேன் அன்று
தனிமையில் நின்றேன் இன்று !!

கவலைகள் வேண்டாம்
பிரிவினால் கலங்கிட வேண்டாம்
சென்ற வினையைச் சிறப்பாய் முடித்திடு
சிறகடிக்கும் பறவையாய் பறந்திடு

தமிழ் மொழியின் அன்பனாய்
இயற்றினேன் பலக் கவிதை
பிரிந்திடும் நண்பனாய்
பிரியா நட்புடன் முதல் கவிதை..

—————————————————————————-

நிரஞ்சன்

நீ நிலவென்பதால்…

love_couple_silhouettes_moon-t3

நீ
நிலவென்பதால்,
என் காதலும்
இரவாகவே
இருந்துவிடுகிறது!

எழுதி,எழுதி
என் கவிதைக்கே
காதல் வந்துவிட்டது,
உனக்கு?

நீ
வரும் வழியில்
நானும்,
நான்
வரும் வழியென
நீயும்
காத்திருந்தோம்,
நாம் சந்திக்கவேயில்லை;

காதல்
நம்மை சந்தித்தது!

இவ்வளவு இனிப்பை
காலம் மறைத்ததா?
இல்லை
கண்ணே மறைத்ததா?

நாகரிகம் கருதி
நானும்,
நாணம் கருதி
நீயும்,
பேசாமலே பேசுகிறோமே!

கண்ணை திறந்தே
கனவு காண்கிறேன்;
ஆமாம்,
உன்னைத்தான்!

நீ
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்!

நான் நீயும்,
நீ நானும் ஆனோம்,
இந்த இடப்பெயர்ச்சி
இயற்பியலா?
இல்லை
களவியலா?

நீ
கவிதைகளின் காதலி,
நான்
கனவுகளின் காதலன்!

நம் காதல்,
கனவுகளின் கவிதையா?
கவிதைகளின் கனவா?

ஆண் கெட்டால் அத்தியாயம்,
பெண் கெட்டால் புத்தகம்;

இன்று
இருமனமும் கெட்டுவிட்டது;
என் கடைசி
அத்தியாயம்;
நம் புத்தகத்திலிருக்கட்டும்..!

————————————————————————————————————-

முத்து ராஜா. க

காதலால் கற்றது..

Love Failure - Love Wallpapers

காதலில்
இன்பம் கற்று
துன்பம் பெற்றவர்களே
அதிகம் உணர்ந்தேன்
உன்னால் பெண்ணே….

காதலில்
தோற்றவனுக்கு உலகில்
எந்த தோல்வியும்
சாதாரணமே உணர்ந்தேன்
உன்னால் பெண்ணே….

காதல்
வலி அறிந்தவனுக்கு உலகில்
எந்த வலியும்
சாதாரணமே உணர்ந்தேன்
உன்னால் பெண்ணே….

காதல்
பிரிவை அடைந்தவனுக்கு உலகில்
எந்த பிரிவும்
சாதாரணமே உணர்ந்தேன்
உன்னால் பெண்ணே….

காதலில்
கனவு மட்டுமில்லை
கண்ணீரும் சுகம்தான்
உணர்கிறன்
உன்னால் பெண்ணே….

உன் நிச்சயிக்கப்பட்ட
திருமணத்தால்
நிச்சயமற்று போனது
நம் காதல்…

காதலை விரும்பி
ஏற்று கொண்டோம் நாம்
துன்பத்தை மட்டும்
நானே அனுபவிக்கிறேன்…

காலத்தின் கை பொம்மையாய்
நம் காதல்
சுகமான காதல் காலங்கள்
சுமையை வதைக்கிறது இன்று
நீயில்லா தருணங்களில்…

காதலால்
உயிரிருந்தும் நடமாடும்
பிணமானேன்
உன்னால் பெண்ணே….

இப்படி நம் காதலை
பற்றி நானே குறை சொல்ல
உன் குழந்தையின் பெயரில்
என் பெயரும் இருப்பதை கண்டு
உணர்ந்தேன் நம் காதல்
வென்றதையும்
தோற்றத்தையும்..!

————————————————————————————–

பாலமுதன்