கவிதை— தாருங்களேன்.!

Image

மயிலோடு விளையாடி
மலரோடு கதைப் பேசி
மானோடு நடைப் பழகி
புல்வெளியில் மெத்தையிட்டு
தென்றலைப் போர்வையாக்கி
கானகத்தில் கதையெழுதி
மின்னலைத் தூரிகையாக்கி
மேகத்தில் ஓவியம் தீட்டி
நீர்வீழ்ச்சியில் நீராடி
காட்டுக் கனிகளை உணவாக்கி
இயற்கையே காட்சியாகி
தத்தையிடம் தமிழ் பழகி
காற்றோடு கவிதையெழுதின
என் கைகளுக்கு
கவிதையொன்றும் சிக்கவில்லை?

கெண்டைவிழிக் கண்கள் அழுகின்றன
வெண்பஞ்சு விரல்கள் எழுதுகோல்
பிடிக்க அஞ்சுகின்றன?
சிலந்திவலை சிக்கலுக்குள்
சிக்கிக் கொண்ட மூளை
சிந்திக்க மறுக்கிறது?
எழுச்சிமிகு எண்ணங்கள்
எழுதச் சொல்கின்றன!
ஏனோ என் காகிதத்தில்
எழுத்துக்கள் பதிய மறுக்கின்றன!
வார்த்தைகளே மறந்துபோய்
மண்ணாங்கட்டி ஆகி
மரத்துப்போன என் மனதிற்கு
யாராவது ஒரு கவிதை
தாருங்களேன்…………………….!

Leave a comment